சுவாமி தோப்பில் அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தின விழா பேரணி

அய்யா வைகுண்டரின் 190-வது அவதார தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற பேரணி சுவாமி தோப்பில் நடைபெற்றது.

Update: 2022-03-04 16:00 GMT

சுவாமி தோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின பேரணி நடந்தது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டர் நாராயணர் அவதாரமாக பார்க்கப்படும் நிலையில் அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிவந்த தினமான மாசி மாதம் 20-ஆம் நாள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி மாசி மாதம் 20 ஆம் நாளான இன்று அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தின விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது..

இதனை தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

முன்னதாக திருச்செந்தூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த அய்யாவழி பக்தர்கள் நாகர்கோவில் நாகராஜா திடலில் ஒன்று திரண்டு அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர்.

அய்யாவின் அகிலத்திரட்டு வாகனம் பேரணியில் முன்னாள் செல்ல அதனைத் தொடர்ந்து சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம் மற்றும் பாரம்பரிய மேளதாளங்களுடன் அன்பு கொடி ஏந்திய பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா ஹரஹர சிவசிவ என்ற கோஷத்துடன் பேரணியாக சென்றனர்.

பேரணியை முன்னிட்டு பேரணி நடைபெறும் நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.மேலும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News