எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி
எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று (ஜன.28) கூறினார்.;
எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி இன்று (ஜன.28) கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி இன்று (ஜன.28) பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு கேட்பது மட்டும் முக்கிய நோக்கமல்ல. மக்களின் பிரச்சினையை கேட்பது மிக முக்கியம். தொகுதி முழுவதும் நடந்து சென்று மக்களை சந்திப்பது என முடிவு செய்து 33 வார்டுகளில் தற்போது வரை 30 வார்டுகளில் மக்களை சந்தித்து உள்ளோம்.
தேர்தலை பயன்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக எடுத்துள்ளோம். இந்த தேர்தலில் வெளியூர் அமைச்சர்கள் வேண்டாம் உள்ளூர் கட்சிக்காரர்கள் வைத்து வேலை செய்ய திமுக தலைவர் உத்தரவிட்டு உள்ளார் என்பதால் நாங்கள் வேலை செய்து வருகிறோம்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் கேட்பவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். நேரில் பார்த்தால் தான் அருமை புரியும். காலை உணவு திட்டம் தேர்தல் வாக்கிற்காக போடப்பட்ட திட்டம் இல்லை. இத்திட்டத்தை பற்றி குற்றம் சொல்பவர்கள் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்.
இத்திட்டம் வயிற்றை நிரப்புவதற்காக அல்ல, குழந்தைகளின் எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக கொண்டு வருகிறது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் தேர்தலுக்காகவும், அரசியலுக்காக என நினைத்தால் அப்படித்தான் இருக்கும். அதன் அடிப்படையை ஆய்ந்து பார்த்தால் தான் தெரியும்.
இன்றுடன் கிழக்கு தொகுதியில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது மக்களை சந்திக்க உள்ளோம். மற்ற அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வரப்போவதில்லை. எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை. தேர்தலுக்கான எந்த அமைச்சரும் வரவில்லை.
இந்தியா கூட்டணி சரியானது அப்படியே இருக்கும். சீமான் மட்டுமல்ல யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அனைவரையும் நியாயமான மரியாதையுடன் நடத்த வேண்டும் நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.