ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-31 12:58 GMT

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குவாலிட்டி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள் , பாதுகாப்பு பணியாளர்கள் என 132 ஒப்பந்த தொழிலாளர்கள்பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திற்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன்படி, இவர்களுக்கு 2021-2022 ஆம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு ரூ.693/-ம், 2022-2023- ஆம் ஆண்டுக்கு நாளொன்றுக்கு ரூ.707/-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனம் நாளொன்றுக்கு ரூ310/- வீதமே ஊதியம் வழங்கி வருகிறது. ஆகவே, மாவட்ட' ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக்கோரி பணியாளர்கள் போராடி வந்தனர்.

இந்நிலையில், தொழிலாளர்களுக்கே தெரியாமல், தொழிலாளர்களின் ஒப்புதல் பெறாமல் நாளொன்றுக்கு சுமார் ரூ.395/- வீதம் மாதம் ரூ.11,840/- ஊதியம் வழங்கப்படும் என கடந்த 21-12-2022 அன்று ஒரு 18(1) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை விட நாளொன்றுக்கு சுமார் ரூ.300/- குறைவாக ஊதியம் நிர்ணயித்து போடப்பட்டுள்ள மேற்கண்ட சட்டவிரோத ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததற்காக ஏ.கல்பனா உள்ளிட்ட 6 தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுக்கப்பட்டு வந்தது.

சட்டவிரோதமாக வேலை மறுக்கப்பட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்கக்கோரியும், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கக்கோரியம் கடந்த 10-01-2023 முதல் 16-01-2023 வரையும், பின்னர் 21-01-2023 முதல் 25-01-2023 வரையிலும்,  இவர்களுக்கு ஆதரவாக லோகநாயகி உள்ளிட்ட பத்து தொழிலாளர்களும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணக்கோரி, தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை மற்றும் ஒப்பந்த நிறுவனத்திற்கும் ஏஐடியுசி ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஈரோடு நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்பந்த நிறுவனத்திற்கும், ஏஐடியுசி தொழிற்சங்கத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

உடன்படிக்கையின்படி, வேலை மறுக்கப்பட்ட மற்றும் ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 16 தொழிலாளர்களுக்கும் முழுச் சம்பளத்துடன் நேற்று முதல் பழையபடி வேலை வழங்கப்படும் என்றும், 15 தினங்களுக்குள் தொழிற்சங்கத்தின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஒப்பந்தநிறுவனம் கடிதம் மூலம் உறுதிமொழி அளித்தது. தொழிலாளர்கள் தரப்பில் எதிர்காலத்தில் முன்னறிவிப்பின்றி இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என்றும், தாங்கள் சார்ந்துள்ள ஏ.ஐ.டி.யு.சி - ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மூலம் கோரிக்களுக்கு தீர்வுகாண முறைப்படி நடவடிக்கை எடுப்போம்' எனவும் கடிதம் மூலம் உறுதியளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, ஈரோடு, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி 16 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குகிறீர்களா? இல்லையா? என்பதை உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு 7.00 மணியளவில் ஒப்பந்த நிறுவனம் ஏ.கல்பனா உள்ளிட்ட 6 தொழிலாளர்களுக்கு இங்கு (ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை) வேலை வழங்க முடியாது என்றும், வேண்டுமானால் பவானி, கோபி, சத்தி, திருச்செங்கோடு போன்ற வேறு அரசு மருத்துவ மனைகளில் வேலை தருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வருவய் கோட்டாட்சியர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், தொழிலாளர் நலனுக்கு எதிராக, சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் அரசு மருத்துவமனையின் நேரடிப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை 10 மணி முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News