கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த வாரம் வரை 105 டிகிரியாக இருந்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக 107 டிகிரியை தாண்டிக் கொளுத்துகிறது.
நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) 107.6 டிகிரியாக இருந்த வெயில், நேற்று (சனிக்கிழமை) 108.32 டிகிரி பாரன்ஹீட்டாக அதிகரித்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
காலை 8 மணிக்கே வெயில் அடிப்பதால் மக்கள் கடும் அவதியடைகின்றனர். மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது.
தொடர்ந்து அடிக்கும் வெயில் காரணமாக குளிர்பானக் கடைகளிலும், சாலையோர இளநீர், தர்ப்பூசணி, நுங்கு கடைகளிலும், கரும்புச்சாறு, கம்பங்கூழ் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.