ஈரோடு மாவட்ட பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழா போட்டி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது.

Update: 2022-12-07 11:30 GMT

பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவினை அந்தியூர் எம்.எல்.ஏ.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கலைத்திறன்களை, வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், தாலுகா, மாவட்டம், மாநிலம் வாரியாக நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு நடுநிலை, இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலைத்திருவிழா போட்டிகள் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றது.ஆடல்,பாடல், மொழித்திறன், மனப்பாடம்,இசை வாசித்தல், பல குரல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், கலைத்திருவிழா போட்டி, 6 முதல், 8ம் வகுப்பு வரை, 9 மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள‌ 14 வட்டாரங்களிலும் கலைத் திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. ஈரோடு வட்டார அளவிலான போட்டிகள் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் ஓவியம், தனிநபர் நடனம், பறை இசை, குழு நடனம், கவிதை, பேச்சு போட்டி உள்பட மொத்தம் 146 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 740 பேர் பங்கேற்றனர். இதேபோல அனைத்து வட்டாரங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.இந்தப் போட்டிகள் மொத்தம் 4 நாள்கள் நடத்தப்படுகிறது. இதில் முதல் 2 இடங்களில் 4 வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், மேலும் முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

இதனையடுத்து, மாவட்டத்தில். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று 7ம் தேதி தொடங்கி உள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அந்தியூர் ஐடியல் பள்ளியிலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையத்திலும், பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளை நடத்த ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர், கோபி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News