பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஈரோடு மாவட்டம் பவானி ஆறு வறண்ட நிலைக்கு மாறி வருவதால் குடிநீர் பற்றாக்குறை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-04-28 13:43 GMT

சிறைமீட்டான்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்துக்கு போதிய தண்ணீர் இல்லாததால், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கசிவுநீரைத் தேக்கி வைத்து, நீரேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

பவானி ஆறு வறண்ட நிலைக்கு மாறி வருவதால் குடிநீர் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு வறண்டு வருவதால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் குடிநீர்த் தேவைக்காக 200 கன அடி நீர் திறக்கப்பட்டாலும், ஆற்றின் எல்லைக்கு சுமார் 8 கி.மீ. முன்னதாகவே பவானி ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.


இந்தநிலை தொடர்ந்தால், பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளின் குடிநீர்த் தேவைக்காக செயல்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதற்கு, ஆற்றின் கரையோரங்களில் நடக்கும் தண்ணீர் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பவானி ஆற்றில் குடிநீர்த் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர், தளவாய்பேட்டை - வைரமங்கலம் பாலத்தைக் கடந்து செல்லவில்லை. பவானி ஆறு காவிரியில் கலக்கும் கூடுதுறைக்கு முன்பாக சுமார் 8 கி.மீ. தொலைவிலேயே தண்ணீர் இல்லாமல் நின்றுபோனது.

பாலத்துக்கு கீழ்பகுதியில் உள்ள ஒலகடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜம்பை பேரூராட்சிக்கு தண்ணீர் எடுக்கப்படும் புதை கிணறுகளைச் சுற்றிலும் தண்ணீர் காணப்படவில்லை. மேலும், பள்ளப்பாளையம் பேரூராட்சி, காஞ்சிக்கோவில் பேருராட்சி, பெத்தாம்பாளையம் பேரூராட்சி, நல்லாம்பட்டி பேரூராட்சி மற்றும் பெரியபுலியூர் ஊராட்சிக்கு குடிநீர் வழங்கும்  நல்லாம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் சிறைமீட்டான்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்துக்கு போதிய தண்ணீர் இல்லை. மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து கசிவுநீரைத் தேக்கி வைத்து, நீரேற்றம் செய்த போதிலும் போதிய தண்ணீர் இல்லாததால் நீரேற்றம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.


ஜம்பையில் உள்ள புதை கிணற்றுக்கு ஆற்றில் பள்ளமான பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் வரும் வகையில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் பவானி ஆற்றின் குறுக்கே பெரியமோளபாளையத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலும் தண்ணீர் இல்லை. ஆற்றில் ஆங்காங்கே உள்ள பள்ளமான பகுதிகளிலும், குழிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் அப்பகுதியினைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீருக்கு திறக்கப்படும் தண்ணீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதால் குடிநீர்த் திட்டங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. மழை கைகொடுத்தால் மட்டுமே இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணமுடியும்.

Tags:    

Similar News