ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Update: 2023-02-07 07:36 GMT

வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் மற்றும் தே.மு.தி.க. கட்சி வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் கடந்த 6 நாட்களில் வரை மொத்தம் 59 பேர் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கே எஸ்.தென்னரசு இன்று (பிப்ரவரி7) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் தனது வேட்புமனுவை தென்னரசு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , வெற்றி உறுதி என்று கூறி இரண்டு விரல்களை காட்டிச் சென்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கவுள்ளது. வரும் 10-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. 

Similar News