கோவையில் பெண் யானை உயிரிழப்பு.. வெடி விபத்து காரணம் என தகவல்...

கோவையில் காயமடைந்த பெண் யானையின் உயிரிழப்புக்கு வெடி விபத்து காரணம் என உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2023-03-20 15:06 GMT

கோவையில் உயிரிழந்த பெண் யானை.

கோவை மற்றும் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும், வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதும் வாடிக்கையான நிகழ்வாக தொடர்ந்து வருகிறது. காட்டுக்குள் இருந்து வெளியேறும் யானைகள் சில சமயங்களில் காயமடையும் நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டை விட்டு வெளியேறிய யானை ஒன்று தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த யானை மின் கம்பியில் உரசி உயிரிழக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு, பிராணிகள் நல ஆர்வர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த வகையில், கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாயில் காயமடைந்து இருந்த நிலையில் பெண் காட்டு யானை ஓன்று சமீபத்தில் மீட்கப்பட்டது. அந்த யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகளியார் வனத்துறை முகாமில் கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், திடீரென நேற்று அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில் இன்று யானைக்கு வன கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் யானையின் தாடை மற்றும் பற்கள் வெடி மருந்து உட்கொண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டு காயமடைந்ததாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிக்கையை இன்று வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக காரமடை வனச்சரக வனத்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து யானை இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யானை ஒன்று வெடி மருந்து உட்கொண்டு இறந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News