கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-02-09 07:04 GMT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 1500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், எப்போதும், மருத்துவமனை பரபரப்பாகவே காணப்படும்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நாள் ஒன்றுக்கு 412 ரூபாயை ஊதியமாக பெற்று வருகின்றனர். விரைவில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் 721 ரூபாயாக வழங்கப்படும் என கடந்த ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் அறிவித்து இருந்தார்.


ஆனால், தற்போது வரை அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அந்த ஊதிய உயர்வை வழங்காத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் இன்று திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஊதிய உயர்வுடன் சேர்த்து பல ஆண்டுகளாக முறையிட்டும் செவி சாய்க்கப்படாத நிலையில் தங்களுக்கு ஊதிய உயர்வையாவது உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணிகள் தொய்வு அடைந்து உள்ளன. போராட்டக்காரர்களுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நிர்மலா நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தது.

இதையடுத்து ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் காவல் துறையினரும் போராட்ட குழுவினருடன் நடத்தினர். ஆனால், அதற்கும் செவி சாய்க்காமல் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வட்டாட்சியர் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவோம் என ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News