மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
Coimbatore News- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
Coimbatore News, Coimbatore News Today- சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றர். அதன் அடிப்படையில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் கரட்டுமேடு அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்கிற நாய் சேகர் (33) மற்றும் சான்சா (22) ஆகியோர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில், தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 36 நபர்கள் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 55.41 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.