கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள் அவதி..!

கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நின்றது

Update: 2024-05-17 12:45 GMT

சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் வாகனங்களை சூழ்ந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கோவையிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக கோவையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், நவஇந்தியா, புலியகுளம், இடையார்பாளையம், கவுண்டம்பாளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

கடந்த சில தினங்களாக கோவையில் மழை பெய்த நிலையில் நேற்றைய தினம் மழை பெய்யவில்லை. இந்நிலையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்  தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Tags:    

Similar News