கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கல்லாறு - ஹில்கிரோவ் இடையேயான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மண் மற்றும் பாறைகள் ரயில் பாதையில் சரிந்து விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலை இரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணச்சீட்டு தொகை முழுகையாக திரும்ப வழங்கப்படும் என இரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், மீண்டும் மலை ரயில் சேவை துவங்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மலை இரயில் இரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கனமழை எச்சரிக்கை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா வரவேண்டாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.