செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்மா?

கோடைகாலம் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், சிறுத்தை வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களுக்குள் வருகின்றன.

Update: 2021-04-13 01:30 GMT

செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர், திருவடிச்சூலம், இருங்குன்றம்பள்ளி, அஞ்சூர், தைலாவரம், திருமணி உள்ளிட்ட பகுதிகளில் தானியங்கி கூண்டுகள் அமைத்தும், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண்காணித்து வந்தனர்.

கடந்த 2014–ம் ஆண்டு தானியங்கி கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. வனத்துறை அதிகாரிகளும் அதை உறுதி செய்தனர்.

இதையடுத்து செங்கல்பட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 5 அதிநவீன கூண்டுகள் மற்றும் தானியங்கி கேமராக்களை அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2016–ம் ஆண்டிலும் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. ஆனால் இதுநாள் வரை சிறுத்தையை பிடிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால் காட்டுப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் மீண்டும் சிறுத்தை செங்கல்பட்டு அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் சிறுத்தையின் கால் தடம் இருப்பதாகவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்காளில் நாய்களை தற்போது சிறுத்தை வேட்டையாடி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியை வனத்துறை அதிகாரிகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்களால் நிம்மதியாக வாழமுடியும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கூண்டுகளையும், தானியங்கி கேமராக்களையும் மீண்டும் சிறுத்தை நடமாட்டமுள்ள பகுதிகளில் அமைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News