செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கழிப்பறை வசதி இல்லை: பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உரிய கழிப்பறை வசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2021-11-17 11:15 GMT

செங்கல்பட்டு மாவட்டத் தலைமை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பயன்பாடில்லாத கழிப்பறைகள். 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் உள்நோயாளிகள் 4 ஆயிரம் பேரும், வெளிநோயாளிகள் 3 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் செங்கல்பட்டு வழியே செல்வதால் இந்த பகுதிகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும். இதில் காயம் அடைவோரும், செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகளும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

தினமும் நோயாளியை பார்க்க ஏராளமான உறவினர்களும் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அந்தந்த வார்டுகளில் ஒரு கழிப்பறை, ஒரு குளியலறையும், பெரிய வார்டுகளில் 2 கழிப்பறை, 2 குளியலறை வசதியும் உள்ளது. அதிலும் அடிக்கடி தண்ணீர் வராமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நோயாளியை பார்க்க வரும் உறவினர்கள் தங்க வசதியாக மருத்துவமனை வளாகத்தில் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கைக்கு பின், உறவினர்களுக்காக இரண்டு கட்டண கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாமல் கதவுகள் உடைந்து கிடக்கின்றது. அதில் ஒரு கட்டண கழிப்பறை, குளியலறை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே  கிடக்கிறது.இதனால் பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சிலர் இரவில் மருத்துவமனை வளாகத்தை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் மருத்துவமனை சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பிற்காக, போதிய கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News