குப்பையில் கிடந்த ஆயிரக்கணக்கான காலாவதி ஆகாத மாத்திரைகளால் பரபரப்பு

செங்கல்பட்டு முக்கிய வீதியொன்றில், குப்பையில் ஆயிரக்கணக்கான அரசின் மாத்திரைகள் கொட்டப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-01-21 03:30 GMT

குப்பையில் கிடக்கும் அரசு மருத்துவமனை மாத்திரைகள். 

செங்கல்பட்டு, வேதாச்சலம்நகர், பிரசித்திபெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகே ரோட்டில், 100 மாத்திரைகளை உள்ளடக்கிய 30 பெட்டிகள் (3 ஆயிரம் மாத்திரைகள்) இன்று காலை,  குப்பைத்தொட்டியில் கிடந்தன. இவை, இந்த 2022ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை; காலாவதியாக கால அவகாசம் உள்ளது. இதை யார் வீசினார்கள்; எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்று தெரியவில்லை. 

இது குறித்து, செங்கல்பட்டு  தலைமை மருத்துவ அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, 'பொதுமக்களுக்கு ஏற்படும் உடல்வலி, காய்ச்சல் இருமல் ஆகியவற்றிற்கும், மாணவ, மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.

செங்கல்பட்டு தலைமை மருத்துவமனை அல்லது சமுதாய சுகாதார நிலையத்துக்கு வந்த மருந்துகளாக இவை இருக்கலாம். இது குறித்து உரிய விசாரணை செய்யப்படும். மேலும் இந்த மருந்துகளை வெளியூரில் இருந்து வேறு யாராவது கொண்டு வந்து குப்பையில் வீசியிருக்கலாம்' என்றார். இச்சம்பவம், அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News