மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு சிறை

செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி, ரூ. 45 லட்சம் மோசடி செய்தவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Update: 2021-08-25 05:30 GMT

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதன்

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவா் மதன்(36). இவர் தமிழ்நாடு இளைஞர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை நிறுவி இதன் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுடன் போட்டோக்கள் எடுத்து வைத்துள்ளாா்.

அந்த போட்டோக்களை தெரிந்தவர்களிடம் காட்டி தனக்கு அரசியல் மற்றும் சினிமா நடிகர்களிடம் நெருங்கிய தொடா்பு உள்ளதாகவும், தன்னால் கல்லூரிகளில் எளிதில் சீட் வாங்கி தருவதாகவும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி பலரிடமும்   மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த மெய்யூர் குப்பம் பகுதியை சேர்ந்த மீனவரான சேகர் என்பவரின் மகன் புகழேந்திக்கு,  மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி, கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ.45 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தராமலும், பணத்தையும் திரும்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த புகழேந்தி கடந்த 2018 -ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, மாணவா் புகழேந்தியின் தந்தை சேகர் 2018 -ஆம் ஆண்டு அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம், தனது பணத்தை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் மதனை தேடிவந்தனா். ஆனால் மதன் தொடா்ந்து தலைமறைவாக இருந்தாா். இந்நிலையில், தற்போதைய  செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாா்,  சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் வைத்து மதனை நேற்று காலையில்   கைது செய்தனர்.

போலீசார்  மேற்கொண்ட விசாரணையில் ,  சேகரை ஏமாற்றி,  அவா் மகன் புகழேந்திக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மதன் மீது வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு போலீசார், அவரை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News