மார்கழி மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்

மார்கழி மழையால் மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-01-04 10:00 GMT

செங்கல்பட்டு மாவட்ட மண்பானை தயாரிப்பு தொழிலாளர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் மண்பானை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலவாக்கம், திருமணி, அஞ்சூர், மதுராந்தகம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு களிமண்ணை பதப்படுத்தி மண்பானை மற்றும் பொங்கல் வைப்பதற்கான விறகு அடுப்புகள், மண் சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி ஸ்தம்பித்துள்ளது.

இதுகுறித்து திருமணி கிராமத்தில் மண்பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டுள்ள அர்ஜூனன் சார்பில் கூறியதாவது:- தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு களிமண்ணால் பாரம்பரியமிக்க பொங்கல் பானை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தற்போது மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. தொடர் மழையினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்தொழிலில் ஈடுபட்டுவருவோர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழை காரணமாக பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளை சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாத மழையினால் மண்பாண்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர், மண்பாண்ட தொழிலாளர்கள் நிலை அறிந்து மழைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டும். அதே நிலையில் விடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் மண்பாண்ட தொழில்கள் நலிந்து வருவதை தடுத்து மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிலை இளைஞர்கள் கற்று கொள்ளும் வகையில் பயிற்சி கூடங்கள் அமைத்து பாரம்பரியம் மிக்க மண்பாண்ட தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News