காலாவதியான பயிற்சி இயந்திரங்களை மாற்ற வேண்டும் : அலுவலர் சங்கம் கோரிக்கை

காலாவதியான பயிற்சி இயந்திரங்களை மாற்ற வேண்டும் என தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-01-08 04:15 GMT
மாநில தொழிற் பயிற்சி அலுவலர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சங்க தேர்தல் ஆணையர் டி.கார்த்திகேயேன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாநிலத் தலைவர்கள் என்.சுப்பிரமணியன், சி.ராமலிங்கம், முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.லோகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளர் மு.தாமோதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன், துணைத் தலைவர்கள் பி.நடராஜன், ஆர்.அமரேசன், பொதுச் செயலாளர் என்.ரமேஷ், செயலாளர் எஸ்.நவநீதன், அமைப்புச் செயலாளர் ச.அஜெய்ராஜ், பொருளாளர் என்.திருநாவுக்கரசு ஆகிய மாநில நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் என்.ரமேஷ் பேசுகையில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள 40 விழுக்காடு பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்பிட வேண்டும்,

காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளதால் பணிச்சுமையுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. 1967ம் ஆண்டு நிறுவப்பட்ட தொழிற்பயிற்சி இயந்திரங்கள் காலாவதியாகி உள்ள நிலையில் புதிய பயிற்சி இயந்திரங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவைகளை புதுப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் வழிகாட்டுதலின்படி சான்றிதழ் தாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள் பதவி உயர்வின் போது, காலமுறை இடமாறுதலின் போதும், கலந்தாய்வு முறையில் இடமாறுதல் வழங்கிட வேண்டும்,

தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்சி அலுவலர் மற்றும் பணியமர்த்தும் அலுவலர் பணியிடங்களை மற்ற மாநிலங்களைப் போல் அரசிதழ் பதவி பெற்ற அதிகாரியாகத் தரம் உயர்த்தவும், தொழில்பிரிவு அலகுக்கு ஏற்றபடி புதியதாகப் பயிற்சி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் 12 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். 

Tags:    

Similar News