செங்கல்பட்டு அருகே கொளப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவி கொலை:மர்ம நபர்கள் வெறிச்செயல்

செங்கல்பட்டு அருகே கொளப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவியை கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் மூடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-18 07:45 GMT

கொளப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி ( பைல் படம்)

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஆலப்பாக்கம் கிராமம், அண்ணா நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாம்சன் தினகரன்(63). சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் டைம் கீப்பராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்

இதில் முதல் மனைவி ஆலிஸ்(55), மகன் இம்மானுவேல்(28), மகள் பெனிட்டா(30) ஆகியோர் கூடுவாஞ்சேரியில் தனியாக வசிக்கின்றனர்.

இரண்டாவது மனைவி ஜெனட்(52) என்பவருடன் சாம்சன் தினகரன் வாழ்ந்து வருகின்றார். இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது அவரது பெற்றோர்களிடம் பேசுவதற்காக மகள் பெனிட்டா போனில் தொடர்பு கொண்டார்.

ஆனால் அவரது பெற்றோர் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று மீண்டும் போன் மூலம் தொடர்பு கொண்டார். வெகு நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மகள் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

இதில் பின்பக்க கேட் மற்றும் கதவு திறக்கப்பட்ட நிலையில், கார் மட்டும் உள்ளது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததை குறித்து கூறியுள்ளனர். இதில் பயந்து போன அவரது மகள், மகன் மற்றும் முதல் மனைவி ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் இரண்டு வீடுகளிலும் உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மாயமானதை கண்டு திடுக்கிட்டனர்.

இதுகுறித்து வண்டலூா் ஓட்டேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து வந்து இரண்டு வீடுகளிலும் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் சோதனை செய்தனர்.

விசாரணையில், வீட்டின் முன்பகுதியில் உள்ள இரும்பு கேட் எப்போதும் மூடப்பட்டிருக்கும். இரண்டு நாய்கள் திறந்த வெளியில் உலாவி கொண்டிருக்கும். இதில் அவரது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வந்தால் மட்டுமே வீட்டு கதவையும், கேட்டையும் திறப்பார். மற்றபடி யார் சென்றாலும் திறக்க மாட்டார்.

மேலும் நாய்களும் குரைக்கும். ஆனால் நேற்று இரவு முன்பக்கத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் அனைக்கப்பட்டிருந்தன. மேலும் முன்பக்க கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டு பின்பக்க கதவுகள் திறக்கப்படும் இருந்தன.

அதுமட்டுமல்லாமல் பின் பக்கத்தில் உள்ள மற்றொரு வீட்டின் அரை பூட்டப்பட்டு இருந்தது. மேலும் இரண்டாவது மனைவி ஜெனட்டின் செல்போன் மட்டும் முன்பக்க வீட்டிலும், சாம்சங்தினகரனின் செல்போன் நெடுங்குன்றம் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையில் கிடந்தது என்றும் கூறினர்.

இதனையடுத்து மற்றொரு வீட்டில் உள்ள அறையின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். இதில் ரத்தம் சிதறியதை தண்ணீர் ஊற்றி கழுவி இருந்ததையும், துர்நாற்றம் வீசாமல் இருக்க மஞ்சள் தூளை கொட்டி கழுவிட்டு டப்பாவை கொலையாளிகள் அங்கேயே வீசப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

இதில் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். இதில் ஜெனிட்டா கை கட்டப்பட்ட நிலையிலும், சாம்சன்தினகரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலலும் சடலமாக கிடந்தனர்.

போலீசார் கொலையாகி கிடந்த இருவரது சடலத்தையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கணவன்-மனைவி கொலையான சம்பவம் அப்பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News