செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 1,400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 1,400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் கூறியுள்ளார்.

Update: 2021-09-11 08:09 GMT

பைல் படம்

இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு பணியில் தடுப்பூசிதான் பெரிய அளவில் பங்காற்றுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு கடந்த 30-ந் தேதியில் இருந்து மாவட்டத்தில் நாளொன்றுக்கு 23 ஆயிரம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கடந்த 5-ந் தேதி வரை 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டு பயனடைந்துள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 7 லட்சத்து 87 ஆயிரத்து 964 பேருக்கும், 2-வது முறையாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 114 பேருக்கும் ஆக மொத்தம் 10 லட்சத்து 1 ஆயிரத்து 778 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அதன் மூலம் நமது மாவட்டத்தில் 50 சதவீதம் 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனை 100 சதவீதமாக எட்டுவதன் மூலம் நாம் 3-வது அலையிலிருந்து மாவட்டத்தை பாதுகாக்கவும் உயிரிழப்பை தடுக்கவும் முடியும். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் 1,400 முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க அன்புடன் வேண்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News