சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னையில் சட்ட மாணவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-25 06:30 GMT

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள்.

சென்னை வியாசா்பாடி புதுநகா், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரகீம் (21). இவா் தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பிஎல் ஐந்தாமாண்டு படித்து வருகிறாா். மேலும் அவா், பகுதி நேரமாக கொடுங்கையூரில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவா் கடந்த 14-ஆம் தேதி பணி முடித்து மிதிவண்டியில் வீடு திரும்பும்போது, கொடுங்கையூா் எம்ஆா் நகா் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அப்துல் ரகீமை மறித்து விசாரித்தனா். அப்போது அப்துல் ரகீம் முகக் கவசம் சரியாக அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து அவருக்கு போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா். ஆனால் அப்துல் ரகீம், மறுப்பு தெரிவித்து பேசியதாக அவரது மிதிவண்டியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அப்துல் ரகீமை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இச்சம்பவம் தொடா்பான காட்சிகள் பதிவாகாமல் இருக்க காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். மேலும் சட்டக்கல்லூரி மாணவனை தாக்கி போலீசாரை கைது செய்திடவேண்டும், அக்காவல்நிலையத்தில் பொருப்பு பதவியிலிருக்கும் ஆய்வாளரை உடனடியாக நீக்கி, உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News