கூடுவாஞ்சேரி: வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுக்கள் அவதி

கூடுவாஞ்சேரியில் வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுக்கள் அவதிக்குள்ளாகினர்.

Update: 2021-11-27 10:45 GMT

கூடுவாஞ்சேரியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளம்.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சில நாட்களாக தொடர்ந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம், கூடுவாஞ்சேரி, கல்வாய், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஒருசில ஏரிகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறி, குடியிருப்பு பகுதிகளில் வழியாக செல்வதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து  நிற்கிறது. இந்த கனமழையின் காரணமாக நந்திவரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. மேலும் பல வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்து விட்டது.

மழைநீருடன் பாம்புகள், விஷபூச்சிகளும் வீடுகளுக்கு படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு,  வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். தற்போது அப்பகுதியில் தன்னார்வலர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஏரிக்கு நேரில் ஆய்வு செய்து, மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News