செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது; இதனால், சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

Update: 2021-10-05 10:30 GMT

செங்கல்பட்டு இராஜாஜி ரோட்டில் தேங்கியுள்ள மழைநீர்.

செங்கல்பட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் சிரமப்பட்டார்கள். நேற்றும், வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. நேற்று மாலையில்  வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.

இந்நிலையில், இன்றுகாலை 6 மணி முதல், இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 8 மணிநேரம் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் அடைமழை கொட்டி தீர்த்தது. இதனால், வீதியில் நடந்து சென்ற பொதுமக்கள், ஆங்காங்கே ஒதுங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தார்கள்.

செங்கல்பட்டின் முக்கிய வீதியான இராஜாஜி ரோடு பகுதியில் சாக்கடையில் அடைப்புகள் ஏற்பட்டு அங்கு மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறியது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி தாம்பரம், மதுராந்தகம் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் என முழுவதும் கனமழை பெய்தது.  இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

Tags:    

Similar News