செங்கல்பட்டு: உள்ளாட்சித்தேர்தல் பாதுகாப்புக்கு 2671 காவலர்கள் நியமனம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பிற்காக 2671 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-05 12:45 GMT

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வருகின்ற 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. இதில் வாக்காளர்கள் அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி தங்களது வாக்குரிமையை செலுத்த,  செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை மொத்தம் 2671 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

பதற்றமான வாக்கு சாவடிகளாக மொத்தம் 137 கண்டறியப்பட்டு அத்தகைய வாக்குசாவடி மையங்கள் ஒவ்வொன்றிற்கும் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் நாளன்று எந்தவித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் கண்காணிக்க அதிவிரைவுப்படை, விரைவுப்படை மற்றும் சிறப்பு ரோந்து பிரிவு ஆகியவற்றின் மூலம் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் போக்குவரத்து சீர்பட இயங்க தனியாக போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற மொத்தம் 178 குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. 82 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. 32 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பின் 7200102104 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம், அல்லது புகார்களை,  வாட்சப் மூலமாகவும் பதிவு செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News