கூடுவாஞ்சேரி அருகே 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா பாதிப்பு

கூடுவாஞ்சேரி அருகே 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா 25 போ் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளநிலையில் 8 போ் தப்பியோட்டம்.

Update: 2021-05-22 12:11 GMT

கூடுவாஞ்சேரி அருகே அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுமானப்பணியிலிருந்த 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அரசு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டுமானப்பணியிலிருந்த 33 வடமாநில தொழிலாளா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.அவா்களில் 25 போ் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளநிலையில் 8 போ் தப்பியோடி விட்டனர். அவா்களை சுகாதாரத்துறையினா் தேடுகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2,100 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் சுமாா் 100 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கட்டிட வேலை செய்த தொழிலாளா்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.இதையடுத்து கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதாரத்துறையினா்,அவா்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தினா். அதில் 33 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து இன்று காலை சுகாதாரத்துறையினா் 108 ஆம்புலன்ஸ்களுடன் அப்பகுதிக்கு வந்தனா்.கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளவா்களை தேடிக்கண்டுப்பிடித்து ஆம்புலன்ஸ்கள் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். இவ்வாறாக 25 பேரை மருத்துவமனையில் சோ்த்துவிட்டனா்.

ஆனால் அவா்களில் 8 போ் மாயமாகி விட்டனா். அந்த 8 பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. அவா்களை சுகாதாரத்துறையினா் வந்து மருத்துவமனைக்கு போக அழைத்தபோது,புறப்பட்டு வருவது போல் நடித்து தலைமறைவாகிவிட்டனா்.அவா்களை சுகாதாரத்துறையினா் தேடிவருகின்றனா்.

கொரோனா பாதிப்பிற்குள்ளான வடமாநில தொழிலாளா்கள் 8 போ் மருத்துவமனைக்கு செல்லாமல் தப்பியோடியது இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News