தடுப்பூசி நிறுவன ஊழியர்கள் ஊதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-08 12:00 GMT

திருக்கழுக்குன்றத்தில் 26 மாதங்களாக சம்பளம் இல்லாமல் கடனில் தவிக்கும் எச்.எல்.எல் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஊதியம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசு மூலம் எச்.எல்.எல் நிறுவனம் மூலம் மிகப்பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதில், பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது.கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இந்நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்து விரைவில் நிறுவனம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துச் சென்றார்.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கடன்தொல்லையில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்நிறுவனத்தில் பணிசெய்து வந்த அரசு என்ற ஊழியர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக துவக்கிட வேண்டும், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதி வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் முன்பு ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளா் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் சங்கர், ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி வினாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News