செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

Update: 2021-01-27 04:45 GMT

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்காக தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுப்பதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே கிழக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக நினைவிடத்தை இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண ஆயிரக்கணக்கான வாகனங்களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மெரினாவை நோக்கி படையெடுப்பதால் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணிக்கு செல்வோர் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதில் சென்னையில் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது போக்குவரத்து நெரிசல் குறையும் வரை செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இல்லாமல் இன்று காலை முதல் அனுமத்திக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு வருகின்றனர்.

Tags:    

Similar News