அரியலூரில் ராணுவ அதிகாரி கலெக்டர் அலுவகம் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டம்

இந்திய ராணுவத்தில் பயிற்சியாளராக உள்ள ராணுவ அதிகாரி தனது வீட்டிற்கு செல்லும் பாதையை வருவாய்த் துறையில் பணியாற்றும் அலுவலர் ஆக்கிரமிப்பு செய்து வழிவிட மறுப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-21 13:30 GMT

அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி எடுக்கும் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு மருதூர் கிராமத்தில் மூன்று சென்ட் இடமும் அதில் வீடும் உள்ளது. இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள குமார் என்பவர் இளவரசன் இடத்தை சுற்றி சுவர் வைத்துள்ளார்.

வருவாய்த் துறையில் பணியாற்றும் குமார் என்பவர் பொது இடத்தில் சுவர் எழுப்பி உள்ளதால் ராணுவ வீரர் இளவரசன் தனது வீட்டிற்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள சுவரை அகற்றக்கோரி இளவரசனின் தாயார் சரஸ்வதி கடந்த பிப்ரவரி மாதம் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ராணுவத்திலிருந்து இளவரசன் நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் கடிதமும் அனுப்பி உள்ளார். அதற்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு ராணுவத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்த இளவரசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு தரையில் அமர்ந்து ராணுவ உடையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த தொடங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் உதவி ஆய்வாளர் உதயகுமார் ராணுவ வீரர் இளவரசனுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் மாவட்ட ஆட்சியரின் குற்றவியல் நேர்முக உதவியாளர் ஸ்ரீதர் ராணுவ அதிகாரி இளவரசனுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்¬துயில், நாளை நில அளவையர்களைக் கொண்டு இடத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து சமாதானம் அடைந்த ராணுவ அதிகாரி தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு சென்றார்.

உயிரை துச்சமென மதித்து ராணுவத்தில் பணியாற்றும் தங்களுக்கு கிராமத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சுட்டிக்காட்டும் போது உயர் அரசு அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்திப்பதற்கு கூட அனுமதி அளிக்காதது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக வேதனையுடன் இளவரசன் தெரிவித்தது சுற்றியிருந்த பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News