நெல் கொள்முதலுக்கு இணையத்தில் பதிவு: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரியலூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-09-28 09:30 GMT

இது தொடர்பாக, அரியலூர் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பு: தமிழகத்தில் நெல் விவசாயிகள் பயனடையும் வகையில்,  கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில்,  எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-2022ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து,  கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு,  அரியலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News