பஞ்ச ஸ்தலங்களில் வாயு ஸ்தலம் ஸ்ரீகாளஹஸ்தி..! வரலாறு அறிவோம் வாருங்கள்..!

Kalahasti Temple in Tamil-ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்யும் தலம் இந்த ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். அதன் வரலாறு தெரிந்துகொள்வோம்.

Update: 2022-10-27 07:47 GMT

Kalahasti Temple in Tamil

Kalahasti Temple in Tamil

பஞ்ச ஸ்தலங்களில் காளஹஸ்தி வாயு ஸ்தலமாகும். ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது ராகு-கேது தான். ஆமாம் அங்குதான் ராகு - கேதுவுக்கு பரிகார பூஜை செய்வது வழக்கம்.

திருமண தடை

திருமண தடை நீங்குவதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்திக்கு வந்து ராகு-கேது பரிகார பூஜை செய்து வருகின்றனர். பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட இந்த கோவில் 500 வருடங்களுக்கும் மேல் பழமையான கோவில் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் வரலாற்றில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளதை வரலாற்றில் நாம் படிக்க முடியும். அதை பாதிக்கும்போது இப்படியும் ஒரு பக்தி இருக்க முடியுமா என்று நாமே ஆச்சர்யப்படுவோம். அந்த அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது அந்த வரலாறு. சைவ ஸ்தலமான ஸ்ரீ காலஹஸ்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு, ஞானப்பிரசன்னாம்பிகை தாயாரோடு காட்சி தருகிறார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை சிலந்தி ஒன்று வந்து தினமும் வழிபடுமாம். ஒரு நாள் சிலந்தி வழிபாட்டுக்காக வந்தபோது நல்ல மழை பெய்து சிவலிங்கம் நனைந்துகொண்டிருந்ததை சிலந்தி பார்த்தது. மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி சிவபெருமான் நனையாமல் வைத்ததாம். ஆனால் அப்போது பெரும் இடி ஒன்று இடித்ததால் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

Kalahasti Temple in Tamil

அதே போல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடுமாம். நாகம் வணங்கிச் சென்ற பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யுமாம். பின்னர் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்வது வழக்கமாம். அவ்வாறு யானை நீரை வாரி இறைக்கும்போது, நாகம் வைத்திருந்த அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் மாணிக்கங்கள் சிதறிக் கிடப்பது கண்டு அந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்று யானையை மூச்சடைக்க செய்தது.

இதனால் யானையால் சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் வேகமாக மோதியது. இவ்வாறு மோதி மோதி யானையும் நாகமும் கடைசியில் இறந்து போயின. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தி கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Kalahasti Temple in Tamil

அந்த காலகட்டத்தில் ஒரு முறை அந்தணர் ஒருவர் இந்த லிங்கத்தை பூஜித்து வந்துள்ளார். அந்தணர் பூஜை செய்து சிவலிங்கத்தை தினமும் வணங்கி வந்ததை அங்கு இருந்த வேடன் ஒருவன் பார்த்துக்கொண்டிருந்தானாம்.அந்த வேடனுக்கு சிவன் மீது அதீத பக்தி ஏற்பட்டதாம். அதனால் அவனும் சிவனுக்கு பூஜை செய்ய ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தணர் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வராத சமயத்தில் இந்த வேடன் தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்து வந்தானாம். ஒரு நாள் இதை அறிந்த அந்த அந்தணர் ஆகா..சிவபெருமானுக்கு இப்படி இறைச்சியை படைத்துவிட்டார்களே. என்ன செய்வது? மிகப்பெரிய தவறு நடந்து விட்டதே என்று எண்ணி வருந்தினார், அந்த அந்தணர். அன்று இரவு அந்தணர் கனவில் தோன்றிய சிவபெருமான், 'நாளை ஒளிந்து இருந்து இந்த இறைச்சியை வைப்பது யார் என்று பார். அவருடைய பக்தியை பார்' என்றும் கூறி சிவபெருமான் மறைந்தாராம்.

அதன் படியே மறுநாள் வனப்பகுதியில் ஒளிந்திருந்த அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம் போல் வேடன் வந்து இறைச்சியை படைத்து வழிபாடுகள் செய்தானாம். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஊற்றியது. இதைக் கண்டு பதறிப்போன வேடன் எவ்வளவோ முயற்சித்தும் ரத்தம் நிற்காத காரணத்தினால், வருந்திய வேடன் தனது அம்பினை எடுத்து தனது கண்ணைத் தோண்டி எடுத்து லிங்கத்திற்கு வைத்து விட்டான். உடனே ரத்தம் நின்று விட்டது. அடுத்ததாக மறு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அந்த வேடன் மனம் தளரவில்லை. தன்னுடைய கால் கட்டை விரலால் ரத்தம் வழிவதை தடுக்க லிங்கத்தின் கண்களில் வைத்து இரண்டாவது கண்ணை அம்புகளால் தோண்டி எடுக்க முற்பட்டதும் சிவபெருமான் காட்சி கொடுத்து, கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… என்று மூன்றுமுறை கூறினாராம். இந்த காட்சியினைக் கண்டு நெகிழ்ந்து போனார் அந்த அந்தணர். வேடனின் பக்தி அவரையே பிரமிக்க வைத்துவிட்டது. எந்த தயக்கமும் இல்லாமல் தனது கண்ணைத் தோண்டிய வேடனின் பக்தி அந்தணருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பக்திக்கு மிஞ்சிய ஞானம் இல்லை என்பதை அந்தணர் உணர்ந்தார். சைவ கடவுளான சிவபெருமான் இறைச்சியை வைத்து வழிபட்டாலும் கூட, தீவிர பக்தரான அந்த வேடனுடைய பக்தியை ஏற்ற காரணத்தினால் பிற்காலத்தில் அந்த வேடனுக்கும் இந்த தலத்தில் இடம் கிடைத்தது. திண்ணனார் என்ற அந்த வேடனின் பெயர் சிவபெருமானுக்கு கண் வழங்கியதால் கண்ணப்பர் என்று புகழப்பட்டார். அதனால் இந்த கோவிலில் அவரையும் காண முடியும்.

கோவிலின் சிறப்புகள்:

துளி அளவிலும் காற்றுப் புகாத கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் இந்த லிங்கத்திற்கு ஏற்றப்படும் தீபம் ஆனது படிப்படியாக மேலெழும்பி அழகாக நிற்காமல் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். காற்றே இல்லாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவது வியப்பிற்குரியது என்பது விஞ்ஞானிகளே வியந்து கூறியுள்ளனர்.

ஸ்ரீ காளஹஸ்தி பெயர் எப்படி வந்தது ?

ஸ்ரீ காளஹஸ்தி என்பதில் ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் இப்பெயர் பெற்று விளங்குகிறது.

அகத்தியர் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டு இங்கிருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றது விநாயகரை கோபம் மூட்டியதாம். இதனால் விநாயகர் அருகில் இருக்கின்ற பொன்முகலி ஆற்றை முழுவதுமாக வற்றச் செய்து விட்டார். இதனால் மனம் வருந்திய அகத்தியர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. பிற்காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இன்றும் இந்த விநாயகரைத் தரிசிக்க பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.

கோவிலைப்பற்றிய பல குறிப்புகள் தேவாரப் பாடல்களிலும், புராணங்களிலும் தெளிவாக கூறபட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை. அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி கோவிலும் ஒன்று என்பதை நாம் அறியவேண்டும்.

ஸ்ரீ காளஹஸ்தி கோவில், ஆந்திர மாநிலம்,திருப்பதி மாவட்டத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News