Avinashilingeswarar Temple Kumbabhishekam- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் யாகசாலைகள் அமைக்கும் பணி தீவிரம்
Avinashilingeswarar Temple Kumbabhishekam- பிரசித்தி பெற்ற அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 3ல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக யாகசாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Avinashilingeswarar Temple Kumbabhishekam- விநாசம் என்ற சொல்லுக்கு அழிவு என்று பொருள். அ-விநாசம் - என்றால் அழிவில்லாதது என்று பொருள். அவிநாசம் என்பதே அவிநாசி என்று மருவியது. இதன் புராணப்பெயர் திருப்புக்கொளியூர். கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சியாக விளங்குகிறது அவிநாசி.
தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே ஏழு நிலை கோபுரத்துடன் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். இங்கு சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இவர் அவிநாசியப்பர், அவிநாசி நாதர், பெருங்கேடிலியப்பர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். சுவாமி சன்னதிக்கு வலதுபுறத்தில் அம்பாள் சன்னதி இருக்கிறது. அம்பாளுக்கு கருணாம்பிகை நாயகி என்றும், பெருங்கருணை நாயகி என்றும் பெயர்கள்.
பிரம்மா தவமிருந்த தலம் இது. இத்தலத்து சுவாமியும், அம்பிகையும் தங்கள் பெருங்கருணையால் பக்தர்களுக்கு எவ்வித அழிவும் நேராமல் காப்பவர்கள் என்பதால், இத்தலம் அவிநாசி என்று அழைக்கப்படுகிறது.
சுந்தரர் பெருமான் ஒருமுறை இத்தலத்துக்கு வந்தார். அப்போது ஒரு வீட்டில் அந்தணச் சிறுவனுக்கு பூணூல் சடங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர்வீட்டில் வசித்த அந்தணத் தம்பதியர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். இதுபற்றி சுந்தரர் விசாரித்தார்.
அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் இவ்விரு வீடுகளைச் சேர்ந்த சிறுவர்களும் இங்குள்ள தாமரைப் பொய்கைக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது முதலையால் பிடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர், அவனை நினைத்து அழுது கொண்டிருப்பதும், தப்பி வந்த சிறுவனுக்கு பூணூல் சடங்கு நடைபெறுவதும் தெரியவந்தது.
சுந்தரர் மனம் வருந்தினார். இத்தலத்து இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வேண்டியபடியே குறிப்பிட்ட தாமரைப் பொய்கைக்கு வந்தார். அங்கு குளம் வற்றியிருந்தது. தண்ணீரும் இல்லை, முதலையும் இல்லை. அங்கிருந்தபடியே,
“உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே”
என்று பாடினார்.
பிள்ளையைத் தரச் சொல்லு என்று இறைவனுக்கு உத்தரவிடும் தோரணையில் அவர் பாடி முடிக்கவும் பொய்கையில் தண்ணீர் நிரம்பியது. எங்கிருந்தோ வந்த முதலையின் வாயில் இருந்து சிறுவன் வெளியே வந்தான். ஐந்து வயதில் மாயமான சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் கழிந்திருந்ததால், அப்போது எட்டு வயதாகி இருந்தது. பெற்றோரும் மற்றவர்களும் மகிழ்ந்தனர்.
மேற்கண்ட பாடல் தவிர மேலும் ஒன்பது பாடல்களை அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சுந்தரர் பாடியிருக்கிறார். அவிநாசியில் கோயிலுக்கு தென்மேற்கே உள்ள தாமரைப் பொய்கையையும், அதன் கரையில் உள்ள சுந்தரர் கோயிலையும் இப்போதும் காணலாம். இக்கோயிலில் முதலை தனது வாயில் பிள்ளையை ஏந்தி வரும் சிற்பம் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.
பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று அவிநாசி லிங்கேஸ்வரர் இந்த பொய்கைக் கரையில் உள்ள சுந்தரர் பெருமான் கோயிலுக்கு எழுந்தருள்வார். அங்கு இந்த திருவிளையாடலும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். சித்திரை மாதத்தில் 14 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
கொங்கு மண்டலத்தில் தேவார பாடல் பெற்ற ஏழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கொங்கு சோழர்கள் கட்டிய இக்கோவிலில் பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகரம் மற்றும் மைசூர் மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தற்போதைய அறங்காவலர் குழு பொறுப்பேற்றதும் திருப்பணி செய்து கும்பாபிஷேக விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் திருமாளிகை பத்தி அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கும்பாபிஷேக விழா பிப்ரவரி 2-ம் தேதி நடக்க உள்ள நிலையில், மயிலாடு துறையை சேர்ந்த குழுவினர், யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். கோவில் அன்னதான மண்டபம் அருகே 3 பகுதிகளாக 80 குண்டங்களுடன் யாகசாலைகள் அமைக்கப்படுகின்றன.
அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் மற்றும் சுப்பிரமணியருக்கு நவாக்னி வேள்விசாலை அமைக்கப்படுகின்றன. விநாயகர், பாதிரியம்மன், கால பைரவருக்கு பஞ்சாக்னி யாகசாலையும் அமைக்கப்படுகிறது.
விநாயகருக்கு பத்மவேதிகை, சிவபெருமானுக்கு, பஞ்சாசன வேதிகை, அம்மனுக்கு ஸ்ரீசக்ர வேதிகை, முருகப்பெருமானுக்கு சற்கோண வேதி கைகள் அமைக்கப்படுகின்றன. 150க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை நிகழ்த்த உள்ளதாக சிவாச்சாரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் கூறியதாவது,
கோவில் 2ம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம், கருங்கல்தளம் அமைப்பது, கதவுகள் புதுப்பிப்பு பணி, கோபுரம் மற்றும் விமானம் பெயின்டிங் பணி முடிந்துள்ளது. தெப்பக்குளம், படிக்கட்டுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது.
திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் வருகிற பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்காக, மயிலாடுதுறையை சேர்ந்த குழுவினர் 80 குண்டங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். விரைவில் யாகசாலையை சுற்றிலும் முளைப்பாலிகை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.