ஒற்றை வரியில் ஆன்மீகம்... புரிய வைத்த ரமணர்!

ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவருக்கு ஒற்றை வரியில் ஆன்மீகத்தை புரிய வைத்தார் ரமணமகரிஷி.;

Update: 2024-11-04 01:42 GMT

பகவான் ரமண மகிரிஷி ( கோப்பு படம்)

பகவானை சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார். பகவானை புரிந்து கொள்ள ஆசைப்பட்டார். ஆசிரமத்தில் தங்கினார். ஆசிரமத்தில் ஒருவர் அரிசி களைந்து கொண்டிருக்க, இன்னொருவர் காய்கள் நறுக்கிக் கொண்டிருக்க, வேறொருவர் சமையற்கூடங்களை, பார்வையாளர் இடங்களை பெருக்கிக் கொண்டிருக்க, இன்னொரு இளைஞர் ஆசிரமத்தில் உள்ள பொருள்களைத் துணியால் தூசு போகத் துடைத்துக்கொண்டிருக்க, வேறொருவர் தோட்டத்தைப் பராமரிக்க, சகலரும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அமைதியான அந்தக் காலை நேரத்தில் பகவான் ஒரு மரபெஞ்சில் அமர்ந்த படி தொலைதூரம் வெறுமே பார்த்துக்கொண்டிருந்தார். அசையாது அமைதியாய் அமர்ந்திருந்தார். நேரம் கடந்தது. வேலைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. ரமண பகவான் அசையாது அமர்ந்திருந்தது ஐரோப்பியருக்கு ஆச்சரியமாக இருந்தது. மெல்ல பகவானை அணுகினார். கை கூப்பினார். ஏதோ கேட்க விரும்புகிறார் என்பது அந்தச் சைகையில் தெரிந்தது. பகவான் என்ன? என்று தலை அசைத்தார்.

When every others are working why are you idling ? (இங்கு அனைவரும் வேலை செய்து கொண்டிருக்க நீங்கள் மட்டும் ஏன் சும்மா அமர்ந்திருக்கிறீர்) என்று கேட்டார். சிறிது நேரம் அமைதியாக இருந்த பகவான் மெல்ல தலைதூக்கி There are no others என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார். மற்றவர் என்று இங்கு யாரும் இல்லை என்று அதற்கு அர்த்தம் தொனித்தது. இங்கு வேலை செய்பவர் அனைவரும் நானே. எனக்கும், அவர்களுக்கும் எந்தப் பிரிவும் இல்லை. நான் என்ற இடத்தை தக்க வைத்துக்கொள்ளவில்லை. நான் இல்லாததால் அந்த இடத்தில் மற்றவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். மற்றவர்கள் நிரம்பியிருப்பதால் நான் அங்கு இல்லை என்கிற அர்த்தம் அதில் தொனித்தது. There are no others. எல்லாமும் நானே என்கிற தத்துவம் அங்கு வெளிப்பட்டது.

Similar News