தமிழக கவர்னருக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம்
தமிழக கவர்னருக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.;
தி.மு.க. கூட்டணி கட்சிகள். கோப்பு படம்.
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதல் அவருக்கும் ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.கவர்னர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு உடனுக்குடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.நீட் தேர்வு உள்பட தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார் என்று தமிழக அரசு சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கவர்னர் ஆர்.என். ரவி தமிழகத்தில் கலந்து கொள்ளும் கல்லூரி விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் தி.மு.க. அரசு பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். கோவையில் கார் வெடித்து தீப்பிடித்தது பயங்கரவாத தாக்குதல் என்றும், இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு தாமதமாகத்தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்படைத்தது என்றும் குற்றம் சாட்டி பேசினார். அவருடைய இந்த கருத்துக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கவர்னர் கருத்துக்கு தமிழ அரசு சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கவர்னர் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தி.மு.க.வின் டி.ஆர். பாலு, தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.க., ம.ம.க.,ஐயூ எம் எல், கொ.மதே.க., த.வா.க. உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை மூலம் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கவர்னர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற வகையில் ஆர்.என்.ரவி கருத்து தெரிவிப்பதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும். கவர்னர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசலாம். இவ்வாறு பேசி தமிழகத்தில் கவர்னர் குழப்பதை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? பா.ஜ.க. தலைவர்களை மகிழ்விக்கவே கவர்னர் இவ்வாறு பேசுகிறார். கவர்னர் பேசும் அபத்த கருத்துகளுக்கு எதிராக பலர் அளித்த விளக்கங்களை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அவர் இவ்வாறு பேசுவது அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கே எதிரானது" என்று அந்த அறிக்கையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் காரசாரமாக கருத்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. கூட்டணி கட்யினரின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.