ஆட்சியாளர்கள் கரை வேட்டி கட்டலாமா? மக்களே சொல்லுங்க..!

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஸ்டாலினிடம் கேட்காத கேள்வியை சமூக ஊடகங்கள் உதயநிதியிடம் கேட்கின்றன.

Update: 2024-10-27 08:18 GMT

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி 

வெள்ளை குல்லா... கருப்பு கண்ணாடி... வெள்ளை துண்டு, மஞ்சள் சில்க் சட்டை, கரை வேட்டி... இது எம்.ஜி.ஆரின் அடையாளம். கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு, வெள்ளை சட்டை, கரைவேட்டி இது கருணாநிதியின் அடையாளம். அதேபோல் முதல்வர் ஸ்டாலினுக்கும் தற்போதைய உருவம் ஒரு அடையாளம்.

இது தலைவர்களின் பிராண்ட் போல் மாறிப்போனது. ஜெயலலிதாவே கூட ஆரம்ப காலத்தில் கருப்பு, சிவப்பு, வெள்ளை கரை போட்ட சேலை தான் அணிந்து வலம் வந்தார். முதல்வரான பின்னர் கலர் சேலைக்கு மாறி பின்னர் பச்சை கலர் சேலையினை தனது பிராண்ட் ஆக மாற்றினார்.

உதயநிதி ஸ்டாலின், ஜீன்ஸ் பேண்ட்... வெள்ளை நிற டிசர்ட்டில் வலம் வருகிறார். டிசர்ட்டில் கருப்பு சிவப்பில் உதயசூரியன் சின்னமும், கொடி ஸ்டிக்கரும் உள்ளது. இது உதயநிதியின் பிராண்ட். இத்தனை தலைவர்கள் கரை வேட்டியில் வலம் வந்த போது, பேண்ட் அணிந்த முதல் திராவிட கட்சித்  தலைவர் உதயநிதி தான். எனவே பேண்டில், கருப்பு சிவப்பு பிரிண்ட் பண்ண முடியாமல், தனது டிசர்ட்டில் பிரிண்ட் செய்துள்ளார்.

இவர் தி.மு.க., தலைவரா? துணை முதல்வரா? எப்ப பார்த்தாலும், கட்சி சின்னம், கலர் அணிந்தே வருகிறார். தமிழகத்தில் உள்ள எட்டரை கோடிப்பேருக்கும் பொதுவான ஒரு நபர்.  துணை முதல்வர் பதவியில் பொறுப்பான ஒருநபர் தனி சின்னம், கொடியுடன் வலம் வரலாமா? என்று சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கின்றனர். இது மிக முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி.


இது குறித்து தி.மு.க.,வினரிடம் கேட்ட போது, ‘எங்கள் துணை முதல்வர் மக்களுக்கு பல கோடி நன்மைகளை செய்து வருகிறார். தி.மு.க., கட்சி பாகுபாடு இல்லாமல் தான் மகளிர்க்கு இலவச பஸ், குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாய், அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கி வருகிறது.

தவிர நுாற்றுக்கணக்கான நலத்திட்டங்களை கோடிக்கணக்கான ரூபாய்களில் செய்து வருகிறது. இதில் பாகுபாடு எதுவும் காட்டுவதில்லை. செய்வது யார்? அவர் எந்த கட்சி? அவரது கட்சியின் சின்னம் எது? கட்சிக் கொடியின் நிறம் எது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வழியில் உதயநிதியும் இந்த வழிமுறையினை பின்பற்றி வருகிறார்.

மோடி உட்பட அத்தனை பேரும் தங்களது ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் கூட பா.ஜ.க., கொடியை அக்கட்சியினர் கட்டத்தான் செய்கின்றனர். சட்டம், நியாயம், தர்மப்படி பார்த்தால் அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னம், கொடிகளை பயன்படுத்தக் கூடாது. ஆனால் நடைமுறையில் சுதந்திர இந்தியாவில் இந்த நடைமுறை நேரு காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது என்றனர்.

தேர்தல் வெற்றிக்குப்பின்னர்...

ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்ற முக்கிய மக்கள் பிரதிநிதிகள் அவர்கள் கட்சி சார்ந்த கரைவேட்டியைக் கட்டக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆட்சிக்கு வராதவரை அவர்கள் கட்சிக்கு உரியவர்கள். ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் மக்களுக்கு உரியவர்கள். அனைத்து மக்களுக்கும் அவர்கள் பொதுவானவர்கள். எனவே கட்சி வேட்டியை கட்டக்கூடாது.

பொது வேட்டி 

இல்லையென்றால் ஆட்சிக்கு வந்தபின்னர் முதல் அமைச்சர், அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு கட்சி சாராத ஒரு பொது பார்டர் கொண்ட வேட்டிகளை அணிய அவர்களே தீர்மானிக்கலாம். இது அரசியலில் ஆட்சியாளர்கள் மீது ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தலாம்.

Tags:    

Similar News