கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவு
கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.;
முதல்வர் ஸ்டாலின்.
கோவை உக்கடத்தில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-10-2022 அன்று ஒரு கார் வெடித்து தீப்பிடித்தது. இதில் கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி உடல் கருகி பலியானார்.இந்தியா முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலியானவர் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இறந்தவரின் கூட்டாளிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் காரணமாக கோவையில் பதற்றமான நிலைமை உள்ளது.கோவை நகர் முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவையில் கார் வெடித்து தீப்பிடித்த சம்பவம் மற்றும் பொதுவான சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோவையில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணை குறித்தும்,கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திட போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:- கோவையில் நடந்தது போன்ற சம்பவங்களின் விசாரணையில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்பு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் எதிர் காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படை உருவாக்கப்படும். கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும். மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றியும்,அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்கள் பற்றியும் தகவல்களை அளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும், அதோடு அவர்களை ஊக்குவித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.