இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
Effects of Global Warming on India- புவி வெப்பமயமாதலை தடுக்காவிட்டால், உலகின் மிகுந்த வளம் கொண்ட நாடான இந்தியாவும் வறட்சியில் சிக்கி விடும் என்ற ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.;
Effects of Global Warming on India- உலக வெப்பமயமாதல் பெரும் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. அதனை தடுக்க உலக தலைவர்கள் போதிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதையே பருவநிலை மாற்றங்கள் உறுதிப்படுத்தி வருகின்றன. இந்தியா மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உலக நாடுகள் அத்தனையும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பெரிய அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நகரில் கேன் தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதுவும் ரேஷன் முறையில். மகாராஷ்டிராவில் ரயில் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இமயமலையில் 60 சதவீதம் பனிப்பாறைகள் இப்போதே உருகி விட்டன. கோடை முடிய இன்னும் 90 நாட்கள் உள்ளன. அதற்குள் மீதி பனிப்பாறைகளும் உருகி விடும் என புவியிலாளர்கள் எச்சரிக்கின்றனர். அவர்கள் சொல்ல வருவது என்ன? இதே நிலை நீடித்தால் கங்கையும் வறண்டு விடும் என்பது தான். இதனை விட பெரிய அபாயம் இந்தியாவிற்கு வேறு இல்லை.
நேற்று அதாவது சித்ராபவுர்ணமியான ஏப்., 23ம் தேதி அன்று ஒரிசா மாநிலம் புவனேஷ்வர், ஆந்திராவின் கடப்பாவில் தலா 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட், சேலம் உட்பட பல நகரங்களில் 107 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் நிலையில், வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. அந்த மக்களை அழகர் பெருமாள் தான் காப்பாற்றி இருக்கிறார். இப்படி இயற்கை நம்மை விட்டு விலகிச் செல்வது மட்டுமின்றி, மனித இனத்திற்கு எதிராக திரும்புவது மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளது.
தேனி போன்ற மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு மாவட்டத்திலேயே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது மிகவும் அபாயகரமான விஷயம். தேனி மாவட்டத்தின் பருவநிலை கிட்டத்தட்ட மூணாறு, தேக்கடி, கொடைக்கானல், ஊட்டி பருவநிலைகளுக்கு இணையான பருவநிலையை கொண்டது தான். தேனி மாவட்டம் மேகமலையில், வெயில் காரணமாக பல குடியிருப்புகள் தீ பற்றிய சம்பவமும் நடந்துள்ளது. தேனி மாவட்டத்தின் காடுகள் பற்றி எரிகின்றன. தற்போது ஆற்றில் திறந்து விட்டுள்ள நீரை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். அப்படி கூடுதல் தண்ணீர் கொடுத்தால் மட்டுமே உள்ளாட்சிகளில் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த முடியும் என உள்ளாட்சிகள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை உட்பட 18 மாவட்டங்கள் இன்னும் சில நாட்களில் வறட்சியில் சிக்கப்போகின்றன. அதனை எப்படி சமாளிக்கப்போகிறோம். என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நிதி வேண்டும் என அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
வானிலை ஆய்வு மையமோ இன்னும் 5 நாட்களில் சராசரி வெப்பநிலையை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் நிலவும். அனல் காற்றும், வெப்ப அலையும் இருக்கும் என எச்சரித்துள்ளது. இந்த சூழலில் நம்மாலே வாழமுடியவில்லை. நம் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பூமியை கொடுக்கப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் அலறுகின்றன.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், இந்த புவிவெப்பமயமாதலை தடுக்க பெரும் விழிப்புணர்வு நடவடிக்கையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இனிமேல் காலம் தாழ்த்த நேரமில்லை என எச்சரித்துள்ளது. வெயிலுக்கும், மழைக்கும், வெள்ளத்திற்கும், அனல்காற்றுக்கும் அஞ்சாத விவசாயிகளே இப்போதைய பருநிலை மாற்றத்தை கண்டு கலங்கி நிற்கின்றனர். விழிக்கும் நேரம் விழிக்காவிட்டால்...பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.