பெரம்பலூர் முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெரம்பலூரில் நடந்த முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Update: 2023-05-27 17:00 GMT

பெரம்பலூரில் பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

பெரம்பலூரில் பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் மாணவர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் உள்ள ராசி திருமண மண்டபத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, உயர் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு அறக்கட்டளை ஆயுட்கால அறங்காவலரும், பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளரும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லுநர் குழுவின் உறுப்பினருமான ஆர். தங்கபிரகாசம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்று பேசினார்.

விழாவில் பங்கேற்ற மாணவிகளின் ஒரு பகுதி.

இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான ஆலோசனைகளை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜெகதீஷ் குமார், பேராசிரியர் சௌந்தரராஜன், சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரியுமான விஜய் பாபு, கோவை ஜி.எஸ்.டி. துணை இயக்குனர் பிரகாஷ் ஐ.ஆர்.எஸ். எழுத்தாளர் மதிவண்ணன், பேராசிரியர்கள் சரவணன், ராமஜெயம் ,பௌர்ணமி அறக்கட்டளை செயலாளர் சுப்பிரமணியன் ,ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் அசோகன், குருநாதன் ஆகியோர் பேசினார்கள்.

டாக்டர் ஜெகதீஷ் குமார் பேசுகையில் 'மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரு நுழைவு தேர்வு தான் நீட் தேர்வு. இதனை கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. நாம் பின்தங்கிய நிலையில் இருப்பதால் இந்த தேர்வில் வெற்றி பெற முடியுமா என்ற ஒரு ஐயப்பாடு நமக்கு ஏற்படுகிறது. ஆனால் தமிழக அரசு, அரசுபள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்காக 7.5 இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. முயற்சி செய்தால் பயிற்சி செய்தால் முடியாதது எதுவும் கிடையாது. ஆதலால் நாம் நுழைவு தேர்வுக்கு கடுமையாக படித்து தான் முன்னேற வேண்டும். நமக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு இருக்கிறது .

அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்தால் மட்டுமே நம்மால் பொருளாதார ரீதியாக பயன் அடைய முடியும். ஆதலால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. முதல் 120 ரேங்கிற்குள் வந்தால் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற முடியும். அதற்கு தகுந்தார் போல் நமது அறிவை கூர்மையாக்கி முயற்சியுடன் படித்தால் நீட் தேர்வில் எளிதாக வெற்றி அடையலாம். நீட் தேர்வில் வெற்றி அடைந்து மருத்துவராக முடியாவிட்டாலும் மருத்துவ துறையில் மருத்துவ உதவியாளர், ஆய்வக உதவியாளர் என பல துணை வேலை வாய்ப்புகள் உள்ளன. படித்தவுடன் வேலை கிடைக்கக்கூடிய அந்த தேர்வுகளில் நாம் கவனம் செலுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றார்.

பேராசிரியர் சௌந்தரராஜன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அகில இந்திய அளவிலான படிப்புகளில் சேருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு பணிகளில் போட்டி தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெறலாம். ஐ.ஐ. சி. எனப்படும் இந்திய அறிவியல் கழகம் ஐ.ஐ.டி ,என் ஐ.டி .என மத்திய அரசு படிப்புகளில் சேர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன ஆனால் அது பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. ஜேஇஇ தேர்வின் மூலம் தான் இவற்றில் சேர முடியும். இந்தியா முழுவதும் ஐ.ஐ.டி. 23ம், என்.ஐ.டி. 32 உள்ளன. இது தவிர மத்திய பல்கலைக்கழகங்களும் உள்ளன. நமது மாணவர்களிடம் ஐ.ஐ.டி, என்.ஐ.டி. பற்றிய விழிப்புணர்வு இல்லை.

அதே போல் நாட்டின் பாதுகாப்புத் துறையில் அதாவது ராணுவத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ராணுவம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது துப்பாக்கியை கையில் ஏந்தி கொண்டு எல்லையில் நிற்கும் ராணுவ வீரன் தான். அதையும் தாண்டி ராணுவத்தில் அதிகாரிகள் பணியில் சேரக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. என். டி. ஏ. எனப்படும் அதிகாரிகளுக்கான அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற முடியும். அந்த பயிற்சியை முடித்தால் ராணுவத்தில் நேரடியாக அதிகாரியாக வேலை செய்யலாம் .அது போட்டி தேர்வுகளை எழுதி சப் கலெக்டராக தேர்வு செய்வதற்குரிய அந்தஸ்து மற்றும் சம்பளம் உள்ள வேலை ஆகும்.

அவற்றிற்கெல்லாம் பள்ளியில் படிக்கும் போது என்.சி.சி. யில் சேர வேண்டும். ஒரு மத்திய அரசு போட்டித் தேர்வு நாம் எழுத வேண்டும் என்றால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். அப்படி தயார் படுத்திக் கொண்டால் தான் போட்டி தேர்வில் வெற்றி அடைய முடியும் .மிலிட்டரியில் சாட் சர்வீஸ் ,பர்மனண்ட் சர்வீஸ் என இரண்டு உள்ளன. இவை சவால்களை சந்திப்பதற்கு மிகவும் பயனுள்ள பணிகளாகும் என்று பேசினார்.

மாவட்ட வருவாய் அதிகாரி விஜய் பாபு பேசுகையில் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. நான் அரசு பள்ளியில் படித்து குறைந்த மதிப்பெண் பெற்றவன் தான். ஆனால் முயற்சி எடுத்து படித்து பல்வேறு துறைகளில் பணியாற்றி விட்டு குரூப் ஒன் தேர்வு மூலம் அரசு பணிக்கு தேர்வாகி தற்போது மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றி வருகிறேன். நாம் பின்தங்கியவர்கள் என்ற மனநிலையில் இருந்து முதலில் மாற வேண்டும். எதையும் சமாளிக்க முடியும் என்ற திறனோடு முயற்சி எடுத்து படித்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும். கல்வி மட்டும் தான் வாழ்க்கையில் அழிக்க முடியாத செல்வம். நாம் செல்வந்தர்களாக இல்லை என்றாலும் செல்வந்தர்களையும் அடக்கி ஆளக்கூடிய அதிகார மையத்தில் நாம் அமர்வதற்கு கல்விதான் நமக்கு கை கொடுக்கும் என்றார்.

இணையதளத்தை தங்க பிரகாசம் துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் அருந்ததியர் சமூக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைக்கும் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தை தங்க பிரகாசம் தொடங்கி வைத்தார். அருந்ததியர் சமூகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு, 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக  அம்பேத்கர்,பெரியார் பற்றிய பேச்சு போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News