விதைகளின் மகத்துவமும் மருத்துவக் குணமும்

விதைகளின் மகத்துவத்தையும் மருத்துவக் குணங்களையும் தெரிந்துகொள்வோம்.

Update: 2023-12-28 01:22 GMT

நாம் அன்றாடம் சமையலுக்கு காய்கறிகளையும் பழங்களையும் பயன்படுத்துகிறோம். சரி, அவற்றில் உள்ள முக்கியமான ஒன்றை வீணடிக்கிறோம். என்னவென்று தெரியுமா? விதைகள். காரணம், விதைகள் தானே என்கிற அலட்சியம்.

விதைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருபவை; பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியவை. பல நோய்களுக்கு அருமருந்தானவை. இத்தனை நற்குணங்கள் கொண்ட விதைகளை உணவில் பலவழிகளில் பயன்படுத்தவும் முடியும்.

இது ஒருபக்கம் இருக்க, பல விதைகளை நாம் அவற்றின் பலன்களை அறியாமலே அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

வெள்ளரி விதை

வெள்ளரி விதையை பழத்துடனோ, சமைத்தோ உண்ணலாம். வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன. சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும். புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

சப்ஜா விதை

சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இது, பித்தத்தைக் குறைக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். ஜீரணப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.

திராட்சை விதை

திராட்சைப் பழத்துடன் அதன் விதைகளையும் சேர்த்து உண்பது நல்லது. வைட்டமின் இ, லினொலெனிக் ஆசிட், பாலிபீனால் உள்ளது. இவை உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, புத்துணர்ச்சி தரக்கூடியவை. மேலும், புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். இதய நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். ரத்தசோகையைத் தடுக்கும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

தர்பூசணி விதை

தர்பூசணி விதையின் மேல் தோலை நீக்கி, காயவைத்து நெய்யில் வறுத்து, உப்பு, மிளகு சேர்த்து உணவோடு சாப்பிடலாம். பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. இந்த விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

முருங்கை விதை

முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையைக் காயுடன் சேர்த்து, சமைத்துச் சாப்பிடலாம். ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை கொழுப்பைக் குறைக்கும்; புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். இதயத்தைப் பலப்படுத்தும். ரத்தசோகையை நீக்கும். எலும்புகள் பலப்படும். விதைகளை, நெய்யில் வறுத்துப் பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும்.

எள்

நல்லெண்ணெயாகவோ, எள்ளைப் பொடித்தோ சாப்பிடலாம். மக்னீசியம், தாமிரம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, துத்தநாகம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன. உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும். தோல் ஆரோக்கியத்துக்கு உதவும். உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்க உதவும்.

சுரைக்காய் விதை

சுரைக்காய் விதைகளை வெயிலில் காயவைத்து, தோலை நீக்கிய பிறகு, அதிலிருக்கும் பருப்பு போன்ற வஸ்துவை எடுத்துப் பொடிசெய்து உணவில் சேர்த்துச் சாப்பிடலாம். வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து நிறைவாக உள்ளன. சிறுநீரை அதிகப்படுத்தி, சிறுநீரகப் பாதை நோய்த் தொற்றைத் தடுக்கும். பித்தத்தைக் குறைத்து, உடல் வெப்பத்தைத் தணிக்கும். வயிற்றுப்போக்கை தடுக்கும்.

நாயுருவி விதை

நாயுருவி விதையைப் பொடியாக்கி தண்ணீர், பால், தேன் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம். நாயுருவி விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் உள்ளன. மூலநோயை தடுக்கும், மூளைத் திறனை மேம்படுத்தும். உடலில் தேவையில்லாத கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். உடலுக்கு வலிமையைக் கூட்டும்.

சூரிய காந்தி விதை

பொதுவாக சூரியகாந்தி விதைகள், சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நல்ல சுவையுடைய இதனைப் பருப்புகள் போலவே மென்று சாப்பிடலாம். நியாசின், வைட்டமின் இ சூரிய காந்தி விதையில் அதிகம் உள்ளன. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளைக் குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன. இவை, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

பரங்கிக்காய் விதை

பரங்கி விதைகளை மிதமான வெயிலில் உலர்த்தி பொடித்துப் பயன்படுத்தலாம். புரதம், அசிட்டிக் ஆசிட் அதிகளவு உள்ளது. வைட்டமின் பி, தையமின், நியாசின் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தடுக்கும். மனஅழுத்ததை குறைக்கும். குடற்புழுக்களை நீக்கும்.

அரச விதை

விதையை இடித்து பொடியாக்கிப் பயன்படுத்தலாம். வைட்டமின் பி, ஆன்டிஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து, துத்தாநாகம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். மலட்டுத் தன்மையை நீக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஆளி விதை

ஆளி விதையை (Flax Seed) வெறும் கடாயில் மிதமான சூட்டில் வறுத்து, அப்படியே உண்ணலாம் அல்லது எண்ணெய்யாகவும் எடுத்துக்கொள்ளாலாம். மேலும், ஆளி விதையைப் பொடித்து, தண்ணீர், தயிர், ஜூஸ், மற்ற உணவுப்பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம்.

இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தாராளமாகக் குடிக்கலாம். இதில் உள்ள ‘ஒமேகா-3’ கொழுப்பு அமிலங்கள் ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்கவும் உதவும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளதால், பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பக்கவாதம் போன்றவை வராமல் காக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் பளபளப்பைத் தரும்.

மாதுளை விதை

மாதுளை பழம் முழுவதுமே விதைகளால் நிரம்பியுள்ளது. மாதுளையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதிக அளவு ஆன்டிஆக்சிடன்ட் உள்ளன. இவை புற்றுநோய், இதயநோய் பாதிப்புகளைத் தடுக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். ரத்தவிருத்தி ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

பப்பாளி விதை

பப்பாளி விதைச் சாறு வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேற்றும். செரிமானம் அதிகரிக்கும். வாயுத்தொல்லை நீங்கும். உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தவும், உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் இந்த விதைகள் பெருமளவில் பயன்படுகின்றன.

Tags:    

Similar News