நடிகர் விஜய் 'இந்த' விஷயத்தில் எம்.ஜி.ஆராக மாறுவாரா?
Vijay Varisu Update-விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் 'ஷூட்டிங்'கில் விரும்பத்தகாத சம்பவம் தினமும் நடந்து வருகிறது. இந்த விஷயத்தை விஜய் கவனித்து, உரிய நடவடிக்கை எடுப்பாரா, என்ற எதிர்பார்ப்பு படக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ளது.
Vijay Varisu Update-தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திர நடிகர். இவர் நடிப்பில், வரும் பொங்கலுக்கு 'வாரிசு' படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க, 'வாரிசு' படப்பிடிப்பில் ஒரு விவகாரமான சம்பவம் தினமும் அரங்கேறி வருகிறது.
அப்படி என்ன விவகாரமான சம்பவம் என்றால், 'வாரிசு' படப்பிடிப்பில் பெரிய நட்சத்திரங்களுக்கு ஒரு சாப்பாடு, லைட்மேன் போன்ற தொழிலாளர்களுக்கு வேறு மாதிரியான சாப்பாடு என்று இரண்டு விதமாக கொடுக்கிறார்களாம். அதிலும் அந்த சாப்பாடு நன்றாகவும் இல்லை என கூறப்படுகிறது. இதெல்லாம் விஜய் காதுக்கு சென்றதா என்பது தான் தற்போது எல்லோரும் கேட்கும் கேள்வியாக உள்ளது.
பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு என்றால், நல்லவிதமாக உணவு வழங்கப்படும் என்பதுதான் படக்குழுவினரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் நட்சத்திர நடிகர்களுக்கு ஒருவிதமான உணவு, தொழிலாளர்களுக்கு வேறொரு விதமான உணவு என்ற இதைப் போன்ற ஒரு நிகழ்வு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் நடந்திருக்கிறது. ஆனால், அந்த பிரச்னையை தனது சாதுரியமான நடவடிக்கையால் தீர்த்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, எம்.ஜி.ஆர் 'பிஸி' ஆக நடித்து கொண்டிருக்கிறார். உணவு இடைவேளை வருகிறது. அப்போது, படப்பிடிப்பில் ஈடுபட்ட முக்கிய நடிகர், நடிகைகள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறுசுவை உணவு விருந்து பரிமாறப்பட்டது. லைட்மேன், சக உதவியாளர்கள், துணை நடிகர்கள் போன்றவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டிருக்கிறது.
இது எப்படியோ, எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்டிவிட்டது. ஆவேசப்படாமல், சில நிமிடங்கள் யோசித்த எம்.ஜி.ஆர், சாதாரண தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படும் பகுதிக்கு திடீரென சென்றிருக்கிறார். அங்கு வரிசையாக தொழிலாளர்கள் உணவுக்காக அமர்ந்திருக்க, அவர்களுக்கு மத்தியில் எம்.ஜி.ஆரும் சென்று அமர்ந்து கொண்டார். எம்.ஜி.ஆர், தொழிலாளர்களுடன் ஒருவராக வந்து சாப்பிடுவதற்காக அமர்ந்திருப்பதை பார்த்த, பந்தி பரிமாறுபவர்கள் 'வெலவெல'த்து போயினர். இதுகுறித்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பந்தியில் உள்ளவர்களுக்கு உடனடியாக உணவு பரிமாறும்படி எம்.ஜி.ஆர் உத்தரவிட, அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
பதறியடித்தபடி ஓடி வந்த படத்தின் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர், அங்கே வழங்கப்பட்ட உணவை பார்த்து எம்.ஜி.ஆரிடம் பேச முடியாமல் தவியாய் தவித்தனர். அவர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர், 'நானும் இவர்களை போன்ற ஒரு தொழிலாளிதான். என்னை போல, இவர்களும் மனிதர்கள்தான். உணவில் எப்போதும் பாகுபாடு காட்டக்கூடாது. படப்பிடிப்பில் அனைவருக்குமே, ஒரே மாதிரியான உணவைதான் வழங்க வேண்டும். அப்படி அனைவருக்கும் சமமான உணவு வழங்குவதில், பட தயாரிப்பாளருக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்படுவதாக இருந்தால், அந்த தொகையை என் சம்பளத்தில், தாராளமாக பிடித்தம் செய்து கொள்ளலாம், என்றும் அந்த வள்ளல் மனிதர் கூறியுள்ளார்.
அரண்டுபோன படத்தின் தயாரிப்பாளர், 'இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது' என்று கூறி, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பும் கேட்டு, வருத்தமும் தெரிவித்துள்ளார்.
அதே போன்ற சம்பவம், விஜய் படப்பிடிப்பிலும் நடப்பதால், எம்.ஜி.ஆர் போல, தொழிலாளர் பக்கம் விஜய் நிற்பாரா, அல்லது 'சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா' என கண்டுகொள்ளால் போவாரா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2