எம்.ஜி.ஆர்., படத்தை பற்றி விமர்சனம் செய்த சோ..!

விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. முன்பு இருந்தது.

Update: 2024-10-23 04:29 GMT

சோ.ராமசாமி 

அரசியலில் இருப்பவர்களுக்கு, எந்த ஒரு கேலியையும் கிண்டலையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும். அதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்.

எம்.ஜி.ஆர். நடித்து, ப. நீலகண்டன் இயக்கத்தில் உருவான 'என் அண்ணன்' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம். சோவும் கூட அந்தப் படத்தில் நடித்திருந்தார். படம் வெளிவந்த சில நாட்களுக்குப் பின், ப.நீலகண்டன் இயக்கத்தில் இன்னொரு படத்தின் ஷூட்டிங். இதிலும் எம்ஜிஆருடன் சோவும் நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையின் போது, இயக்குனர் நீலகண்டனும், சோவும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சற்றுத்தள்ளி அமர்ந்திருந்தார் எம்ஜிஆர். பேச்சுவாக்கில் சோவிடம் இப்படிக் கேட்டார் இயக்குனர் ப. நீலகண்டன். “அது சரி சோ, உங்களுடைய 'துக்ளக்' பத்திரிகை எப்படிப் போகிறது ?”

ஏதோ அக்கறையில்தான் நம்மிடம் இப்படிக் கேட்கிறார் என்று நினைத்த சோ, “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு” என்று சொல்ல, நீலகண்டன் கொஞ்சம் நக்கலாகத் தொடர்ந்து கேட்டார். “ஓஹோ, அது சரி. கலைமகள்னு ஒரு பத்திரிகை வருதே, அது எப்படிப் போகுது ?” சோ உண்மையைச் சொன்னார் : “அது சுமாராத்தான் போறது.”

நீலகண்டன் இன்னும் கொஞ்சம் கிண்டலாக, “பாருங்களேன் சோ, துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் கூட நல்லாப் போகுது. ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது. இது எப்படின்னுதான் புரியல ?”

நீலகண்டனைத் திரும்பிப் பார்த்தார் சோ. இவ்வளவு நேரம் அவர் விசாரித்தது தன்னைக் கிண்டல் செய்யத்தான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டார். சோ சட்டென்று சொன்னார். "பாருங்க சார், எத்தனையோ நல்ல நல்ல படங்களெல்லாம் வந்து ஓடாமல் போயிடுது. ஆனா நீங்க டைரக்ட் பண்ணின 'என் அண்ணன்' நல்லா ஓடுது பாருங்க, இதுவும் அதைப் போலத் தான்னு வச்சுக்குங்களேன்’’. அதிர்ந்து போய் விட்டார் நீலகண்டன். இந்த பதில் தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. அது ஒரு பக்கம் இருக்க, 'என் அண்ணன்' படத்தில் ஹீரோவாக நடித்த எம்ஜிஆர் பக்கத்திலேயே இருக்கிறாரே, அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் ?

நீலகண்டன் சற்றே திரும்பி எம்ஜிஆர் முகத்தைப் பார்க்க, இவர்கள் இருவர் பேசுவதையும் இவ்வளவு நேரம் கவனித்துக் கொண்டிருந்த எம்ஜிஆர். விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம். சிரித்துக் கொண்டே நீலகண்டனிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். “சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க ?” இப்படிச் சொல்லிவிட்டு மீண்டும் சோவை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர். நேருக்கு நேராக ஒருவரைக் கிண்டல் செய்ய, நிறையவே தைரியம் வேண்டும். அந்தத் துணிச்சல் சோவுக்கு இருந்தது.

ஆனால் அதை விடப் பெரிய விஷயம், அந்த கேலியில் உள்ள நிஜத்தைப் புரிந்து கொண்டு, தானும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கும் பெருந்தன்மை... அந்த அதீதமான பெருந்தன்மை எம்ஜிஆருக்கு நிறையவே இருந்தது.

Tags:    

Similar News