விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் புதிய பட டீசர்! எப்படி இருக்கு?
விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள புதிய படம் ஃபீனிக்ஸின் டீசர் வெளியாகியுள்ளது.;
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், படம் விரைவில் 100 கோடி வசூலைப் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் தனது முதல் படத்தில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பாக சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தாலும், ஹீரோவாக இதுவே முதல் படம். இயக்குநராக பிரபல சண்டை பயிற்சியாளர் அனல் அரசு, இசையமைப்பாளராக சாம் சி எஸ் என இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
டீசரின் தொடக்க காட்சியிலேயே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி காட்டப்படுகிறது. அங்கு ஒரு குற்றவாளியாக சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகிறார். அடுத்தடுத்து சண்டைகள், பாக்ஸிங் காட்சிகளும் வர, டீசரின் மீதான எதிர்பார்ப்பு கூடுகிறது. பாக்ஸிங் பயிற்சிகள் எல்லாம் எடுத்து அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் சூர்யா. தொழில்முறை வீரரைப் போலவே இவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பது டீசரில் தெளிவாக தெரிகிறது. அதற்காக உழைப்பை போட்டிருக்கிறார் சூர்யா. இந்த படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.