அடுத்தடுத்து 6 டிராப்! என்னாச்சு சூர்யாவுக்கு?
சூர்யா நடிப்பில் உருவாக இருந்த 6 திரைப்படங்கள் மனக்கசப்பு காரணமாக நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.;
சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த 6 படங்கள் கைவிடப்பட்டதாக வரும் தகவல்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து அவர் நடிக்க இருந்த படங்கள் தாமதமாகியும், கைவிடப்படுவதும் சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் படத்திலிருந்து விலகல்
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டார். இதற்கிடையில், கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் சூர்யா. லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் சூர்யாவை இயக்க முடிவு செய்திருந்த படம் இரும்புக்கை மாயாவி. இந்த படத்தினை விரைவில் இயக்க இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதேநேரம் விக்ரம் படத்தில் வந்த ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகும் என்று கூறப்படுகிறது.
ஹரியுடன் மீண்டும் இணைய முடியாத சூழல்
சூர்யாவுடன் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரியுடன் 'அருவா' படத்தில் இணைய இருந்தார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதுவும் கைவிடப்பட்டது. ஹரி மற்றும் சூர்யா 'ஆறு', 'வேல்', 'சிங்கம் 1, 2, 3' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். ஹரி மற்றும் சூர்யா இருவரும் இணைந்துவிட்டால் அந்த படம் நூறு சதவிகிதம் ஹிட் என்று கோலிவுட்டில் இன்றும் பேச்சு இருக்கிறது. சூர்யா - ஹரி இணைவில் சிங்கம் 3 மட்டும்தான் வசூல் ரீதியாக சரியாக செல்லாத படம்.
கௌதம் மேனன் உடனான படமும் கைவிடப்பட்டது
சூர்யா மற்றும் கௌதம் மேனன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், அதுவும் விரக்தியில் கைவிடப்பட்டது. கௌதம் மேனன் மற்றும் சூர்யா 'காக்க காக்க' மற்றும் 'வாரணம் ஆயிரம்' படங்களில் பணிபுரிந்துள்ளனர். சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியதில் கௌதம் மேனனுக்கும் பங்கு உண்டு அவரது காக்க காக்க திரைப்படம்தான் முதன்முதலில் சூர்யாவை அதிரடி நாயகனாக போலீஸாக காட்டியது.
பாலாவுடன் இணையும் 'வணங்கான்' படத்தின் நிலை
சூர்யாவின் ஆஸ்தான இயக்குநரும், தனது குருவாகப் பெருமைப்படும் பாலாவுடன் 'வணங்கான்' படத்தைத் தொடங்கினார். ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதுவும் கைவிடப்பட்டது. தற்போது அருண் விஜய் நடிக்கத் தயாராகி வருகிறது. பாலா மற்றும் சூர்யா 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினார்கள். இரண்டு படங்களுமே சூர்யாவுக்கு நல்ல பெயரைப் பெற்று தந்த படங்களாகும்.
வெற்றிமாறனுடனான 'வாடிவாசல்'
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் நடிக்க தயாராகி வந்த நிலையில் அந்தப் படமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் விரைவில் துவங்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சுதா கொங்கராவுடன் மீண்டும் படம் உருவாகுமா?
சூர்யாவின் தீவிர ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சுதா கொங்கரா இயக்கத்திலான 'புறநானூறு' படம் தாமதமாகி வருகிறது. ஆனால், அந்தப்படமும் கைவிடப்படும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை முடித்த பின்னர் சூர்யா நடிக்கவுள்ள படங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால், சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.