மீண்டும் அப்பாவான பிரபல நடிகர்...! டிவிட்டரில் அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.;

Update: 2024-06-03 11:45 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

தமிழில் சின்னத்திரையிலிருந்து படிப்படியாக வளர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதன்முதலாக கலந்து கொண்டு மிமிக்ரி செய்தவர், பின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் அடுத்து தொகுப்பாளராகவும் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானாலும், அவர் நாயகனாக அறிமுகமானது மெரினா படம்தான். அடுத்தடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மாவீரன், அயலான், அமரன் என தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.


சினிமாவுக்கு வருவதற்கு முன்னே தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் சிவகார்த்திகேயன். முதலில் இவர்களுக்கு ஆராதனா எனும் பெண் குழந்தை பிறந்தது. அச்சு அசலாக அவரது மனைவி ஆர்த்தியைப் போலவே இருந்த அந்த குழந்தை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் ராசியானதாக அமைந்தது. அடுத்ததாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குகன் எனும் முருகன் பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்கள் கண்டறிந்தனர். வெகுசீக்கிரமாகவே சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக அப்பாவாக போகிறார் என்பதை அறிந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 2ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சிவகார்த்திகேயனின் மனைவி. அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன் இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாயும் சேயும் நலம். உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும் என 3வது குழந்தைக்கு அப்பாவான மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்தது. ஆராதனா, குகனுக்கு பிறகு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதை, ஆராதனா, குகனுக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

முன்னதாக ஜூன் 1ம் தேதி இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதுதான் காரணமா என ரசிகர்கள் இப்போது தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கிறார். அடுத்து லைகா நிறுவனம் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பரான ஆக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். மகன் பிறந்த ராசியில் அவருக்கு அடுத்தடுத்து நல்ல திரைப்படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News