புரிந்துகொள்ளாமல் கமலைச் சாடிய மாரி செல்வராஜ்! மாமன்னன் இசை வெளியீட்டில் என்ன நடந்தது?

வன்முறை வாழ்க்கையல்ல, அரிவாளைக் கீழே போட்டு போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க என்று சொன்ன சக்தியா? இல்ல போலீஸ் தலையைத் துண்டாக்குற கர்ணனா?;

Update: 2023-06-20 03:30 GMT

உதயநிதி தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தைப் பற்றி கமல்ஹாசன் உயர்வாகவே கூறினாலும் கமல் ரசிகர்களுக்கு ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனை வைத்துக்கொண்டே மாரி செல்வராஜ் குழந்தைத் தனமாக நடந்துகொண்டதுதான். 30 வருடங்களுக்கு முன் எதுவும் புரியாத வயதில் பத்து பக்க கட்டுரை எழுதி தானும் பெரிய புரட்சியாளர் என்பதை நிரூபிக்க பல வித்தைகளை செய்திருக்கலாம். ஆனால் இப்போதும் அப்படியா புரிந்துகொள்ளாமல் பேசுவது என மாரி செல்வராஜை பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். இவரின் பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியான நேரத்தில் ஆஹா ஓஹோ என புகழப்பட்டது. சாதி அடக்குமுறைக்கு எதிரான படமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதில் ஹீரோ எப்போதும் அடி வாங்கிக் கொண்டே இருப்பார் என்றும், ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களை எதிர்த்து கேட்க முடியாது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அநாதைகளாக இருக்கிறார்கள் போன்ற ஒரு தொணியை காட்டியிருப்பார்.

ஆனால் உண்மையில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, இன்றைய முதல்வர் ஸ்டாலின் என அவர்களின் பாதுகாப்புக்காக எத்தனையோ சட்டங்களை நடைமுறைப்படுத்த காரணமாக இருந்துள்ளனர். சமூக ரீதியாக எங்கோ ஒரு சில இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றாலும் அதை பெரும்பான்மை மக்கள் எதிர்த்து கேட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவும் முன் வருகிறார்கள். ஒரு சிலர் சாதி வெறியில் செய்யும் செயல்களை எல்லாரும் அப்படித்தான் எனும் கோணத்தில் படத்தில் திணிப்பது தவறான ஒன்று என்று டிவிட்டரில் நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ஆனால் மாரி செல்வராஜ் தனது திரைப்படங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அடங்கிப் போகவேண்டும். திருப்பி அடித்தால் அவர்களுக்குத்தான் பாதிப்பு எனும்படியாக காட்டியிருப்பார். கர்ணன் படத்திலும் கிட்டத்தட்ட அப்படி ஒரு காட்சி இருக்கும். அதே நேரம் அவர்கள் கோபப்பட்டால் உடனே கொலை செய்துவிடுவார்கள் என காட்டி எதிர் தரப்பினரை உசுப்பேத்தும் காட்சிகளையும் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சட்டப்போராட்டம் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைக்கும் அப்பாவியான மக்கள் ஏன் கொலை செய்யப்போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் சூழ்நிலையில், மீண்டும் மாமன்னன் படத்தில் கையில் வாளைக் கொடுத்துள்ளார் என பலரும் பேசி வருகின்றனர்.


வன்முறைதான் வாழ்க்கையல்ல, அரிவாளைக் கீழே போட்டு அறிவை விரிவு செய்யுங்கள். போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க என்று சொன்ன சக்தி இந்த சமூகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டா இருக்கணுமா? இல்ல கெட்டது செய்யிறான்னு பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, அவன் போலீஸ் காரனாவே இருந்தாலும் அவன போட்டுத் தள்ளுன கர்ணன் சமூகத்துக்கு உதாரணா இருக்கணுமா? சட்டத்தின் படி எதுவும் பண்ணாதீங்கனு சொல்ல வறாரா மாரி செல்வராஜ் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் கமல்ஹாசன் மீது வன்மம் கொண்டு கருத்துக்களை வீசும் மாரி செல்வராஜை ஒரு தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். அதுவும் சாதி பற்று மற்றும் (குறிப்பிட்ட) சாதி எதிர்ப்பு காரணமாகத்தான் என்பது மக்களுக்கு புரியாமல் இல்லை. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் முற்போக்காளர்கள் போர்வையில் உயர்சாதியில் பிறந்தவர்கள் எப்போதும் கெட்டவர்கள் எனும் பாணியில் பேசியே வருகின்றனர்.

பரியேறும் பெருமாள் படத்தில் காட்டியது கிட்டத்தட்ட உண்மைக்கு நெருக்கமானதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் தன் வேட்டியை உருவி விட்டதற்காக மானத்தைக் காப்பாற்ற ஓடுவதாக ஒரு முதியவரை காட்டியிருப்பார் மாரி செல்வராஜ்.


இதே மாரி செல்வராஜ்தான் பாபநாசம் படத்தைக் குறை கூறுவது. ஆபாச படம் எடுத்தா அத வெளியில தெரியாம பாத்துக்ககூடாது வெளிப்படையா ஆமா அது நான்தான் அதுனால என்னனு தைரியமாக சொல்லணும்னு சொல்றாரு மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தில் வந்தது ஆண் தானே வேட்டியை உருவிவிட்டால் என்ன? நிர்வாணம் என்ன இங்கு பெரிய பிரச்னையா? தைரியமாக கழண்ட வேட்டியை உடுத்திவிட்டு போகவேண்டியதுதானே ஏன் ஓடுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் டிவிட்டரில் ஒருவர்.

இதுகுறித்து கமல்ஹாசன் ரசிகர்கள் கூறும் விசயங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகவே இருக்கின்றன. தேவர் மகன் படத்துக்கும் 90களில் தென்னகத்தில் நடந்த கலவரங்களுக்கும் நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை. இது ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட விசயங்கள்தான். விருமாண்டி படத்துக்கு சண்டியர் என பெயர் வைக்க எதிர்ப்புகள் கிளம்பியதாக கூறப்பட்டபோது, அந்த சமயத்தில்தான் தேவர்மகன் சமயத்தில் கலவரம் உருவானதாக கட்டமைப்பு செய்யப்பட்டது. ஆனால் இப்போதும் கூட 90களில் வெளியான செய்தித் தாள்களையோ, இணையத்திலோ தேடிப் பாருங்கள் அதுகுறித்த எந்த செய்தியும் இருக்காது.


ஆனால் போற்றிப்பாடடி பொண்ணே பாடல் இன்றளவும் சாதி திருமணங்களிலும், சாதியை உயர்த்தி பிடிப்பவர்கள் வீடுகளிலும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த விசயத்துக்காக கமல்ஹாசன் எந்த வகையில் பொறுப்பாவார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவர் மன்னிப்பும் கேட்டாகிவிட்ட நிலையில், அவர் அரசியலில் பெரிய இடத்துக்கு நகர்ந்துவிடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இதுபோல விவாதங்களை மக்கள் மத்தியில் கிளப்பி விடுகிறார்கள் போல.

தேவர்மகன் படத் தலைப்பிலும், கதை மாந்தர்களின் பெயர்களிலும் சாதி பெயர் இருக்கின்றது. அதைத் தவிர படத்தில் சாதி மோதல்களையோ, தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்கும் எந்த காட்சிகளோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் வரும் இசக்கி எனும் வடிவேல் கதாபாத்திரம் படம் முழுக்க கமல்ஹாசன் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியாக அமைந்திருக்கும். 

Tags:    

Similar News