பாய்ஸ் மணிகண்டன் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?
பாய்ஸ் படத்தில் அறிமுகமான நடிகர் மணிகண்டன்.
பாய்ஸ் படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல் ஆகியோருடன் நடித்திருந்தவர் மணிகண்டன். இவர்களில் சித்தார்த், பரத் இருவரும் பெரிய நடிகர்களாகிவிட்டனர். நகுல் ஒரு சில படங்களில் நடித்தாலும், பாடகராகவும் இருக்கிறார். தமன் மிகப் பெரிய இசையமைப்பாளராக மாறிவிட்டார்.
மணிகண்டன் மட்டும் அடுத்தடுத்து பெரிய படங்கள் ஏதுமின்றி, காணாமல் போய்விட்டார். ஆனால் இவரது வாழ்க்கையில் நடந்த சோகங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
பாய்ஸ் படத்தில் மிக முக்கிய திருப்பத்துக்கு காரணமாக இருப்பவர் மணிகண்டன்தான். நன்கு நடித்திருந்தாலும் அந்த படத்தில் இவருக்கு நெகடிவ் கிளைமேக்ஸ் என்பதால் அதைத் தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் இன்றி தவித்தார். தொடர்ந்து யுகா, கிச்சா வயசு 16 உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அதிலும் மோசமான விமர்சனங்களையே பெற்றார்.
சில காலங்களிலேயே தமிழ் சினிமா மணிகண்டனை ஓரங்கட்டியது. இதனால் அவர் காணாமல் போயிருந்த நிலையில், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படத்தில் மீண்டும் வந்திருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் வில்லனாக அசத்தியிருக்கிறார். படம் மெகாஹிட் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவரது பேட்டியில் தன் நிலை குறித்து பேசியுள்ளார். பாய் படத்துக்கு பிறகு காதல் எஃப்எம், கிச்சா வயசு பதினாறு, யுகா படங்களில் நடித்திருந்ததாக கூறியுள்ள அவர், யுகா படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்பா தவறியதாக வருந்தினார். அதனால் கடன் சுமை அதிகமாகி முழு கடனையும் அடைக்கும்படி ஆகிவிட்டது. வாழ்க்கையில் நிறைய துன்பங்கள், கஷ்டம், ஏமாற்றம், தோல்வி. எல்லா வகையான பிரச்னைகளையும் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், வாழ்க்கையின் மீது பழி போடமாட்டேன் என்றார்.
முகநூலில் பழகி கடன் வாங்கி மலேசியா சென்று ஏமாற்றமடைந்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டிருந்தார். தனக்கு 42 வயதாகிவிட்டது இன்றும் சரியாக இருக்கிறேனா என்பது தெரியவில்லை என்று கூறினார்.