ஆஸ்கர் அகாடமி தேர்வுக்குழுவில் நடிகர் சூர்யா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

Oscar Academy - ஆஸ்கர் அகாடமி உறுப்பினராக தேர்வாகியுள்ள நடிகர் சூர்யாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

Update: 2022-06-30 01:30 GMT

முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் சூர்யா.

Oscar Academy -ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் உறுப்பினராக சேர அழைக்கப்படுவார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு(2022) புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், உலகின் புகழ்பெற்ற 397 கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வானவர்கள் பட்டியலில் நடிகர் சூர்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளைக் கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உட்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் உள்ளனர். ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.

இத்தருணத்தில், நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துப் பதிவில், ''தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்… வானமே எல்லை..!'' என வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திரைப்பிரபலங்களும் சூர்யாவின் நலம் விரும்பிகளும் தமிழகத்தின் முதல் முகமாக ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம் பெறுமாறு அழைக்கப்பட்டிருக்கும் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் இது என பெருமிதத்தோடு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News