பள்ளி வேன் விபத்தில் சிறுவன் பலி

பள்ளி வேன் விபத்தில் சிறுவன் பலி
X
பள்ளி வேனில் வீடு திரும்பிய அண்ணனை பார்க்கும் ஆர்வத்தில் ஓடி வந்த சிறுவன், வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

பள்ளி முடிந்து வேனில் வந்த அண்ணனை பார்க்க ஓடி வந்த தம்பி சக்கரத்தில் சிக்கி பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகே உள்ள கபிலர்மலை அண்ணா நகரைச் சேர்ந்த ரமேஷ் (வயது 29), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். அவரது மனைவி பிரியா (வயது 25). இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்று வயது குழந்தை அஸ்வின் மற்றும் இரண்டு வயது குழந்தை வெற்றிமிதுன். அஸ்வின் கீரம்பூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் படித்து வருகிறார்.

நேற்று மாலை 5:00 மணியளவில் பள்ளி வேனில் வீடு திரும்பிய அஸ்வின், வீட்டின் முன் வேன் நின்றதும் இறங்கி உள்ளே சென்றார். அண்ணனை பார்க்கும் ஆர்வத்தில் சிறுவன் வெற்றிமிதுன் வேனின் முன்புறம் ஓடி வந்தார். ஆனால் இதை கவனிக்காத வேன் டிரைவர், ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 45), வேனை இயக்கி புறப்பட்டார். அப்போது, வெற்றிமிதுன் வேன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக நசுங்கினார். சிறுவன் அலறி துடித்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த தாய் பிரியா, தனது குழந்தையை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் ராமலிங்கத்தை கைது செய்ததோடு, பள்ளி வேனையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story