/* */

போலியாக உர பற்றாக்குறை ஏற்படுத்தினால் உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் போலியாக உரபற்றாக்குறை ஏற்படுத்தினால் உரிமம் ரத்து. உர விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை.

HIGHLIGHTS

போலியாக உர பற்றாக்குறை ஏற்படுத்தினால் உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை
X

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மானாவாரி விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் போதிய அளவிற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு ஆதார் அட்டையுடன், சாகுபடி பரப்பிற்கு தகுந்த அளவு மட்டுமே உரம் விநியோகம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், உர விற்பனையாளர்கள் விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் அனைவருக்கும் தெரியும் வண்ணம் வைத்திடல் வேண்டும். உரம் பெற்று செல்லும் விவசாயிகளிடம் உரிய கையொப்பம் பெறுவதோடு, இரசீதும் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் உரங்களை இருப்பு வைத்துக் கொண்டு, போலியாக உர பற்றாக்குறை ஏற்படுத்தினாலோ மற்றும் உரிய இரசீதின்றி உரம் விற்பனை செய்தாலோ, அரசால் நிர்ணயிக்கப்பட்ட உர விற்பனை விலையினை விட அதிக விற்பனை விலைக்கு விற்றாலோ, உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி உர உரிமம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக இரத்து செய்யப்படும்.

இயற்கை உரம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனி நபர் மூலமாகவோ வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று உர விற்பனை மேற்கொள்ளும் நபர்களிடமிருந்து உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டாம் என்றும், அவை போலி உரமாக இருக்க வாய்ப்பு உள்ளதால், இது குறித்து அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்திடுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Sep 2021 1:45 PM GMT

Related News