திருச்சியில் நூற்றுக்கு நூறு வெற்றி வாகை சூடிய காங்கிரஸ்

65 வார்டுகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 15 இடங்கள் கேட்டு போராடிய காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருந்தது தான் என்றாலும் அவர்களும் கூட்டணி தர்மத்தை உணர்ந்து தி.மு.க. வுடன் இணைந்து போட்டியில் களம் இறங்கினார்கள்.
65 வார்டு முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 5 இடங்களிலும் வெற்றி வாகை சூடி உள்ளது. இதன் மூலம் திருச்சி மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி கிடைத்து உள்ளது .
திருச்சி மாநகராட்சி 2-வது வார்டில் போட்டியிட்ட திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் வெற்றிவாகை சூடியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இதே பகுதியில் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன் 41-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி உள்ளார் .முன்னாள் மேயர் சுஜாதா 31-வது வார்டில் போட்டியிட்ட அவரும் வெற்றிவாகை சூடியுள்ளார். இவர் ஏற்கனவே திருச்சி மாநகராட்சியின் மேயர் பதவியை அலங்கரித்தவர்.
இதுதவிர சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் பேட்ரிக் ராஜ்குமாரின் மனைவி சோபியா விமலா ராணி 24-வது வார்டில் வெற்றிபெற்றுள்ளார். இதே போல காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் 39-வது வார்டில் வெற்றி பெற்று உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu