/* */

தூத்துக்குடியில் மினி மாரத்தான்: பரிசுகளை வென்ற மாணவ, மாணவியர்

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டியை, கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மினி மாரத்தான்: பரிசுகளை வென்ற மாணவ, மாணவியர்
X

மினி மாரத்தான் போட்டியை, கனிமொழி எம்பி, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் விழாவின் ஒருபகுதியாக, தூத்துக்குடியில், வ.உ.சி கல்லூரி சார்பில் மாணவ, மாணவியருக்கு மினி மாராத்தான் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மினி மாரத்தான் போட்டியை, கனிமொழி எம்பி, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வ.உ.சி. கல்லூரியில் இருந்து தொடங்கிய போட்டி தமிழ் சாலை, வ.உ.சி. சாலை, கிரேட் காட்டன் சாலை, பழைய துறைமுகம், பெல் ஹோட்டல், ஜார்ஜ் ரோடு, தேவர்புரம் சாலை வழியாக 9 கி.மீ. தூரம் சென்று, மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. இப்போட்டியில் ஆண்கள் 900 பேர், பெண்கள் 800 பேர் உட்பட மொத்தம் 1700 பேர் பங்கேற்றனர்.

வெற்றியாளர்கள்

ஆண்கள் பிரிவில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வி கல்லூரியை சேர்ந்த பசுபதி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி சதக்கத்துல்லா கல்லூரி மாணவன் நவீன் பிரபு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில், தென்காசி மாவட்டம் வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதலிடத்தையும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா இரண்டாம் இடமும், நாகலாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

முதலிடம் பிடித்தவர்களுக்கு 3 கிராம் தங்கம், வெள்ளி பதக்கம், 5000 ரூபாய் ஊக்க தொகையும்; இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 2 கிராம் தங்கம், வெள்ளி பதக்கம், 4000 ரூபாய் ஊக்க தொகையும்; மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 1 கிராம் தங்கம், வெள்ளி பதக்கம், 3000 ரூபாய் ஊக்க தொகையும் கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு ஆகியோர் நான்காம் இடம் பிடித்தவர்களுக்கு 2000 ரூபாய் ஊக்க தொகையும், ஐந்து முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்க தொகையும் வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கல்லூரி செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு, திமுக பொதுக்குழு உறுப்பினர் எம்பி ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளியின் மகள் சாதனை

மினி மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் தவிர முதல் பத்து இடங்களில், முதலிடம் உள்பட 8 இடங்களை, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா புரம் கிராம கமிட்டி மேல் நிலை பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவிகள் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் காலணிகள் இல்லாமல் வெறும் கால்களால் ஓடி வெற்றி பெற்றுள்ளனர். இதில் முதலிடம் பிடித்த ஐஸ்வர்யாவின், தந்தை பருத்தி மூடை தூக்கும் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Oct 2021 9:45 AM GMT

Related News